Published : 06 Sep 2022 07:04 AM
Last Updated : 06 Sep 2022 07:04 AM

கூட்டுறவு சங்கங்களில் 64 பதவிகளுக்கான தற்செயல் தேர்தல் தேதி அறிவிப்பு

கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா

சென்னை: கூட்டுறவு சங்கங்களின் தேர்தல் ஆணையர் தயானந்த் கட்டாரியா வெளியிட்ட செய்திக்குறிப்பு: தமிழகத்தில் உள்ள அனைத்து வகை கூட்டுறவுச் சங்கங்களிலும் ஏற்பட்டுள்ள தலைவர், துணைத்தலைவர் மற்றும் நிர்வாகக் குழுஉறுப்பினர்கள் காலியிடங்களுக்கான தேர்தல் திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது.

கூட்டுறவுச் சங்கங்களின் பதிவாளர் கட்டுப்பாட்டின் கீழ் வரும் விருதுநகர் மாவட்டம் சத்திரப் புளியங்குளம் தொடக்க வேளாண்மை கூட்டுறவுக் கடன் சங்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்ற மதுரைக் கிளை தீர்ப்பின்படி தலைவர் மற்றும் துணைத் தலைவர் தேர்தலுக்கு திட்டம் அறிவிக்கப்படுகிறது. அதன்படி அச்சங்கத்துக்கான தலைவர், துணைத் தலைவர் தேர்தல் செப்.12-ம் தேதி நடைபெறும்.

கைத்தறி, தொழில் வணிகத் துறை, சமூகநலத் துறை, மீன்வளத் துறை, பட்டுவளர்ச்சித் துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 38 கூட்டுறவுச் சங்கங்களில் 30 தலைவர் மற்றும் 9 துணைத் தலைவர் பதவி காலியிடங்களுக்கான தேர்தலும் அன்று நடைபெறும்.

மேலும், கைத்தறி, துணிநூல் துறை, மீன்வளத் துறை ஆகியதுறைகளின் கீழ் வரும் 4 சங்கங்களில் 3 தலைவர் மற்றும் 3 துணைத் தலைவர் காலி இடங்களுக்கான தேர்தல் அக்டோபர் 7-ம் தேதி நடைபெறும்.

மேலும், கைத்தறித் துறை, தொழில் வணிகத் துறை, சமூக நலத்துறை, மீன்வளத் துறை, பட்டுவளர்ச்சித் துறை ஆகிய 5 துறைகளின் கீழ் வரும் 12 கூட்டுறவுச் சங்கங்களில் 17 நிர்வாகக் குழுஉறுப்பினர்கள் காலி இடங்களுக்கான தேர்தல் நடைபெறுகிறது.

இதற்கான வேட்பு மனுதாக்கல் செப்.22-ம் தேதி தொடங்கும். பரிசீலனை செப்.23-ம் தேதியும், திரும்பப் பெறுதல் மற்றும் இறுதி வேட்பாளர் பட்டியல் செப்.24-ம் தேதியும், போட்டியிருந்தால் செப். 29-ம் தேதி அன்று வாக்குப்பதிவும், வாக்கு எண்ணிக்கை, முடிவு அறிவித்தல் செப்.30-ம் தேதியும் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் கூறப்பட்டுஉள்ளது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x