

திண்டிவனம் அருகே பல்லவர் கால கொற்றவை சிற்பம் கண்டறியப்பட்டது.
திண்டிவனம் அருகே கம்பூர் கிராமத்தில், கல்வெட்டுடன் கூடிய பல்லவர் கால கொற்றவை சிற்பத்தை, விழுப்புரம் அரசு கலைக்கல்லூரி பேராசிரியர் ரமேஷ், ஜெயின் மகளிர் கல்லூரி சமஸ்கிருத துறைத் தலைவர் ரமா சேகர், தொல்லியல் ஆய்வாளர் விஜய் ஆகியோர் கண்டறிந்துள்ளனர்
இது குறித்து அவர்கள் கூறியது:
கொற்றவை நான்கு கரங்களுடன் தாமரை மலரில் நின்ற நிலையில் காணப்படுகிறாள்.வலது தோளுக்கு மேலாக குடையும், இடது தோளுக்கு மேலாக திரிசூலமும் காணப்படுகிறது. சிம்மத்தின் மேல் கிளி ஒன்றும் உள்ளது. சிம்மத்தின் கீழ்ப்புறம் மூன்று வரிகளில். " மாரி செய்வித்த படிமம் " என்னும் கல்வெட்டு வாசகம் காணப்படுகிறது.
மாரி என்பவர் கொற்றவை சிற்பத்தை செய்து கொடுத்துள்ளார் என்பது இதன் பொருளாகும். இதன் எழுத்தமைதியை கொண்டு இதன் காலம் பொது ஆண்டு ஒன்பதாம் நூற்றாண்டு எனலாம். அதாவது பல்லவர்கள் காலத்தில் இச்சிற்பம் செதுக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் எழுத்து பொறிக்கப்பட்ட சிற்பங்கள் அரிதாக கிடைக்கின்றன. அந்த வகையில் கொற்றவை சிற்பம் முக்கியம் வாய்ந்ததாகும். மேலும் கொற்றவையின் ஆடை அணிகலன் அமைப்பு அழகாக உள்ளது. இச்சிற்பத்தை வைத்து பல்லவர் காலத்தில் கம்பூர் சிறப்பு பெற்ற பழமையான ஊர் என்பதை அறியலாம் என்றனர்.