

எய்ம்ஸ் மருத்துவர்கள் மூலம் மத்திய அரசு உளவு பார்ப்பதாகக் கூறுவது தரம் தாழ்ந்த அரசியல் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கண்டனம் தெரிவித்துள்ளார்.
நேற்று முன்தினம் இரவு டெல்லியில் இருந்து சென்னை திரும்பிய அவர் மீனம்பாக்கம் விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
தமிழக முதல்வர் ஜெயலலிதா உடல் நலக் குறைவால் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். அவருக்கு உரிய சிகிச்சை அளிக்க டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் இருந்து டாக்டர்கள் வந்துள்ளனர். ஆனால், அவர்களை மத்திய அரசு உளவு பார்க்க அனுப்பியதாக சில தலைவர்கள் கூறியிருப்பது வேதனை அளிக்கிறது. மருத்துவர்கள் மீது இது போன்ற குற்றச்சாட்டுகளைக் கூறுவது தரம் தாழ்ந்த அரசியல். இது கடும் கண்டனத்துக்குரியது.
முதல்வர் சிகிச்சை பெறும் படங்களை வெளியிட வேண்டும் என்பதும் சரியல்ல. இவ்வாறு பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.