

வேலூர் புதிய பேருந்து நிலையத்தை முதல்வர் திறந்து வைத்து 2 மாதங்கள் கடந்த நிலையில் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு ஓரிரு நாளில் முழு வீச்சில் கொண்டுவர நடவடிக்கை எடுத்துள்ளனர்.
வேலூர் ‘ஸ்மார்ட் சிட்டி’ திட்டத்தின் மிகப்பெரிய பணியாக இருப்பது புதிய பேருந்து நிலைய கட்டுமான பணி. மாவட்ட மக்களின் நீண்ட நாள் கனவான புதிய பேருந்து நிலையம் சுமார்9.25 ஏக்கர் பரப்பளவில் ரூ.53 கோடி மதிப்பீட்டில் கட்டி முடிக்கப்பட்டது.
கடந்த ஜூன் மாதம் இறுதியில் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் வேலூர் புதிய பேருந்து நிலையத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், புதிய பேருந்துகளின் இயக்கத்தையும் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
ஆனால், பேருந்து நிலைய நுழைவு வாயில் பகுதியில் உள்ள மழைநீர் தேங்கும் அளவுக்கு இருந்ததால் அந்த இடத்தில் மீண்டும் புதிய சிமென்ட் தளம் அமைக்கப்பட்டது.
பொதுமக்கள் சிரமம்: இந்த பணிகள் முடிவுற்ற நிலையில் சென்னை, காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் மட்டும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து இயக்க முடிவெடுக்கப்பட்டது. மற்ற பேருந்துகள் பழைய பேருந்து நிலையம் மற்றும் கோட்டை பைபாஸ் சாலையில் உள்ள தற்காலிக பேருந்து நிலையத்தில் இருந்து இயக்கப்படுகின்றன.
மாநகரில் மூன்று இடங்களில் செயல்படும் பேருந்து நிலையங்களால் பொதுமக்கள் பெரும் சிரமத்துக்கு உள்ளாகி வந்தனர். முதல்வர் கைகளால் திறந்து வைக்கப்பட்ட பேருந்து நிலையம் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழுவீச்சில் எப்போது வரும் என கடந்த இரண்டு மாதங்களாக காத்திருந்தனர்.
இந்நிலையில், புதிய பேருந்து நிலையத்தின் நிலுவையில் இருந்த இறுதிகட்ட பணிகள் அனைத்தும் முடிந்துள்ளதால் பொதுமக்கள் பயன்பாட்டுக்கு முழு வீச்சில் கொண்டுவர மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
வேலூர் வட்டார போக்குவரத்து அலுவலரின் அனுமதி கிடைத்ததும் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து அனைத்து பேருந்துகள் ஓரிரு நாளில் இயக்கவுள்ளனர். பேருந்து நிலையத்தில் இருந்து எந்தெந்த ஊர்களுக்கான பேருந்துகள் எந்தெந்த பகுதியில் இருந்து இயக்க வேண்டும் என அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் இறுதி செய்ய வுள்ளனர். இந்த தகவலை வேலூர் மாநகராட்சி ஆணையாளர் அசோக்குமார் உறுதி செய்துள்ளார்.
புதிய பேருந்து நிலையம்: வேலூர் புதிய பேருந்து நிலையத்தில் மொத்த பரப்பளவு - 37,224 சதுர மீட்டர். கட்டுமான பரப்பளவு - 3,187 சதுர மீட்டர். புதிய பேருந்து நிலையத்தில் ஒரே நேரத்தில் 84 பேருந்துகள் வந்து செல்ல முடியும். 96 இரு சக்கர வாகனங்களை நிறுத்தும் வசதியும், 82 கடைகள் கட்டப்பட்டுள்ளன.
3 உணவகங்கள், 75 இருக்கை களுடன் 11 இடங்களில் பயணிகள் காத்திருப்பு பகுதியும், தாய்ப்பால் ஊட்டும் அறையும் கட்டியுள்ளனர். பேருந்து நிலைய முதல் தளத்துக்குச் செல்ல 2 லிப்ட் வசதியும், பயணிகளுக்காக 7 இடங்களில் கழிப்பறைகள் (வெஸ்டர்ன் மற்றும் இண்டியன்) வகைகளாக கட்டியுள்ளனர்.
மாற்றுத்திறனாளிகளுக்கு தனி கழிப்பறையும் கட்டப்பட்டுள்ளன. பயணிகளுக்காக 2 குடிநீர் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் சூரிய ஒளி மின்சாரம் மூலம் மின் விளக்குகள், மின் விசிறிகளை இயக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளனர்.