Published : 05 Sep 2022 04:05 AM
Last Updated : 05 Sep 2022 04:05 AM
சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் பா.செந்தாமரைக்கண்ணன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:
தமிழக பகுதிகளின் மேல் நிலவும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக, தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலான இடங்களில் இன்றும், நாளையும் (செப். 5, 6) இடியுடன் கூடிய மிதமான மழை பெய்யக்கூடும்.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, தென்காசி, மதுரை, கரூர், திருச்சிராப்பள்ளி, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், வேலூர், ராணிப்பேட்டை, திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இன்று (செப். 5) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
நீலகிரி, கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கரூர், திருச்சிராப்பள்ளி, அரியலூர், பெரம்பலூர், கடலூர், மயிலாடுதுறை, நாமக்கல், சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், ராணிப்பேட்டை, திருவள்ளூர், காஞ்சிபுரம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி ஆகிய 22 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் நாளை (செப். 6) கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
தமிழகம், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் செப். 7, 8 ஆகிய 2 நாள்களுக்கு லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும். நீலகிரி கோயம்புத்தூர், திருப்பூர், தேனி, திண்டுக்கல் ஆகிய 5 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அதில் அவர் தெரிவித்துள்ளார்.
மழை அளவு: தமிழகத்தில் நேற்று காலை 8.30 மணியுடன் நிறைவடைந்த 24 மணி நேரத்தில் கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை, ஜம்புகுட்டப்பட்டியில் தலா 7 செ.மீ. கிருஷ்ணகிரி மாவட்டம் நெடுங்கல், கன்னியாகுமரி மாவட்டம் பெருஞ்சாணி அணை, பையூரில் தலா 6 செ.மீ. கன்னியாகுமரி மாவட்டம் புத்தன் அணை, பூதப்பாண்டி, தருமபுரி மாவட்டம் பாலக்கோட்டில் தலா 5 செ.மீ. மழை பதிவாகியுள்ளது.
மீனவர்களுக்கு எச்சரிக்கை: குமரிக்கடல் பகுதிகள், மன்னார் வளைகுடா மற்றும் அதையொட்டிய தென் தமிழக கடலோரப் பகுதிகள், இலங்கையை ஒட்டிய தென் மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் மணிக்கு 40 கி.மீ. முதல் 50 கி.மீ. வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும். எனவே, இந்தப் பகுதிகளுக்கு மீனவர்கள் செப். 6,7,8 ஆகிய தேதிகளில் செல்ல வேண்டாம் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT