

தற்சார்புக்காகப் பாடுபட்டவர் வ.உ.சிதம்பரனார் என்று, அவரது 151-வது பிறந்த தினத்தில் ஆளுநர் ஆர்.என்.ரவி புகழாரம் சூட்டியுள்ளார்.
அவர்வெளியிட்டுள்ள வாழ்த்துச் செய்தியில், ``வ.உ.சிதம்பரம் பிள்ளை தனது வாழ்வை இந்திய விடுதலைக்காக அர்ப்பணித்து, மகத்தான தியாகங்களைச் செய்தவர். தற்சார்பு பெற்ற சுதந்திர இந்தியாவுக்காகப் பாடுபட்டவர்.
வணிகப் போக்குவரத்தில் ஆங்கிலேயர்களின் ஏகபோக உரிமையை முறியடிக்க முதல் உள்ளாட்டு நீராவிக் கப்பல் நிறுவனத்தை நிறுவினார். நமது இளைஞர்களுக்கு வஉசியின் செயலூக்கங்கள் தொடர்ந்து ஊக்கம் அளிப்பவையாக உள்ளன” என்று தெரிவித்துள்ளார்.
இன்று காலை 10:30 மணிக்கு ஆளுநர் மாளிகையில் உள்ள தர்பார் அரங்கில், வஉசி பிறந்த நாள் நிகழ்ச்சி ஆளுநர் ஆர்.என்.ரவி தலைமையில் நடைபெறுகிறது.
மேலும், தமிழக அரசு சார்பில் முதல்வர் ஸ்டாலின் இன்று காலை 9.30 மணிக்கு, சென்னை ராஜாஜி சாலையில் துறைமுகம் வளாகத்தில் உள்ள வஉசி சிலைக்கு மாலை அணிவித்து, மரியாதை செலுத்துகிறார்.
சென்னை கலைவாணர் அரங்கில் கப்பலோட்டிய தமிழன் திரைப்படம் இன்று காலை 10 மணிக்கும், நாளை காலை 10.30 மற்றும் பிற்பகல் 2 மணிக்கும் இலவசமாக திரையிடப்படுகிறது.
தலைவர்கள் வாழ்த்து: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சவுந்தரராஜன்: ஆங்கிலேயருக்கு எதிராக சுதேசி கப்பல் நிறுவனத்தைத் தொடங்கியவர் வ.உ.சிதம்பரனார். அவரது கனவை நனவாக்கும் வகையில் ‘ஐஎன்எஸ் விக்ராந்த்’ என்ற பிரம்மாண்டமான போர்க் கப்பலை முற்றிலுமாக இந்தியாவிலேயே தயாரித்து, உலக அரங்கில் இந்தியாவை தலைநிமிர செய்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நன்றி” என்று தெரிவித்துள்ளார்.
மதிமுக பொதுச் செயலர் வைகோ: தியாகத் தழும்புகளை பெற்ற வஉசி போன்ற தலைவர்கள் போராடிப் பெற்ற விடுதலையை, பாசிச சக்திகள் சிதைப்பதை அனுமதிக்கக் கூடாது. வஉசியின் 151-வது பிறந்த நாளில் அதற்கான உறுதியை எடுப்போம்.
பாமக நிறுவனர் ராமதாஸ்: தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காகப் போராடிய ஈடு இணையற்ற தலைவர் வ.உ.சி.க்கு மரியாதை செலுத்த இது சிறந்த வாய்ப்பாகும்.
இந்திய கல்வி மக்கள் முன்னேற்றக் கழகத் தலைவர் தி.தேவநாதன் யாதவ்: வ.உ.சிதம்பரனாரின் 151-வது பிறந்த நாளில் அவரின் தேசபக்தியை நெஞ்சில் நிறுத்தி, தாய்நாட்டின் விடுதலைக்காகப் போராடிய தலைவர்களின் தியாகத்தை முன்னிறுத்தி, தாய் நாட்டைப் பாதுகாக்க உறுதியேற்போம்.