

கடந்த 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த படங்கள் மற்றும் நடிகர், நடிகைகள் உள்பட 314 பேருக்கு தமிழக அரசின் திரைப்பட விருதுகள் நேற்று வழங்கப்பட்டன.
2009-ம் ஆண்டு முதல் 2014-ம் ஆண்டு வரை வழங்கப்படாமல் இருந்த தமிழக அரசின் திரைப்பட விருதுகள், சின்னத்திரை விருதுகள் மற்றும் எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவன மாணவர்களுக்கான விருதுகள், சென்னை கலைவாணர் அரங்கில் நேற்று நடைபெற்ற விருது வழங்கும் விழாவில் வழங்கப்பட்டன.
இந்த விழாவில், செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் ஆர்.பிரியா, செய்தித் துறைச் செயலர் மகேசன் காசிராஜன் மற்றும் எம்.பி.க்கள், எம்எல்ஏ-க்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதில், 2009 முதல் 2014-ம் ஆண்டு வரை தேர்வு செய்யப்பட்ட சிறந்த திரைப் படங்களின் தயாரிப்பாளர்கள், சிறந்த நடிகர்கள், நடிகைகள், இயக்குநர்கள், இசையமைப்பாளர்கள், பாடகர்கள் மற்றும் தொழில்நுட்பக் கலைஞர்கள், சின்னத்திரை நடிகர்கள், குறும்பட இயக்குநர்கள் உள்பட 314 பேருக்கு அமைச்சர்கள் விருதுகளை வழங்கினர். விருதுக்குத் தேர்வானவர்களில் 235 பேர் விழாவில் பங்கேற்று, விருதுகளைப் பெற்றுக்கொண்டனர்.
பசங்க, மாயாண்டி குடும்பத்தார், அச்சமுண்டு அச்சமுண்டு, மைனா, சாட்டை, தோனி உள்ளிட்ட 18 படங்களுக்கு சிறந்த படங்களுக்கான விருதுகளும், விக்ரம், கரண், ஜீவா, சிவகார்த்திக்கேயன் உள்ளிட்ட 12 நடிகர்கள், பத்மப்பிரியா, அஞ்சலி, ஐஸ்வர்யா ராஜேஷ், நயன்தாரா, சமந்தா உள்ளிட்ட 12 நடிகைகளுக்கு சிறந்த நடிகர், நடிகைகளுக்கான விருதுகளும் வழங்கப்பட்டன.
இதேபோல, பிரகாஷ்ராஜ், விஜய்சேதுபதிக்கு சிறந்த வில்லன்களுக்கான விருது உள்பட சிறந்த இயக்குநர், சிறந்த இசையமைப்பாளர்கள், சண்டைப் பயிற்சி, பின்னணிப் பாடகர், பாடகி, கதையாசியர் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் விருதுகள் வழங்கப்பட்டன.
மேலும், சின்னத்திரை விருதுகள், எம்ஜிஆர் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சிப் பயிற்சி நிறுவனத்தில் பயின்ற மாணவர்களில் சிறந்த குறும்படங்களை இயக்கிய இயக்குநர்கள், ஒளிப்பதிவாளர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன் பேசும்போது, “கரோனா பேரிடரால் பல்வேறு தொழில்கள் பாதிக்கப்பட்டன. அதில் சினிமா துறையும் ஒன்று. இத்தனை ஆண்டுகள் விருதுகள் வழங்கப்படாமல் இருந்ததற்கு, திரைப்படத் துறை மீதான பாராமுகமும் காரணமாக இருந்திருக்கலாம்.
இனி ஆண்டுதோறும் வழங்க வேண்டிய விருதுகள் உடனுக்குடன் வழங்கப்படும். திரைப்படத் தொழிலாளர் வாரியம் நலிவடைந்து இருக்கிறது. அதை திரைப்படத் தயாரிப்பாளர்களும் கவனித்தக் கொள்ள வேண்டும்” என்றார்.
அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு பேசும்போது, “ஆறு ஆண்டுகளுக்கான விருதுகள் ஒரே நாளில் வழங்கப்பட்டுள்ளன. இன்னும் வழங்கப்பட வேண்டிய, 8 ஆண்டுகளுக்கான விருதுகளை வழங்குவதற்கான ஏற்பாடுகளை செய்தித் துறை அமைச்சர் சாமிநாதன் மேற்கொள்வார்” என்றார்.
சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் பேசும்போது, “படத்துக்கு தமிழில் பெயர் வைத்தால் கேளிக்கை வரி விலக்கு வழங்கப்படும் என்று முன்னாள் முதல்வர் கருணாநிதி அறிவித்தார். அதன் பின்னர்தான் படங்களுக்கு அதிக அளவில் தமிழில் பெயர்கள் வைக்கப்பட்டன” என்றார்.