

தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப் பரங்குன்றம் ஆகிய இடங்களில் நடைபெறும் தேர்தலில் பாமக தனித்துப் போட்டியிடும் என பாமக மாநிலத் தலைவர் ஜி.கே.மணி தெரிவித்தார்.
நாமக்கல்லில் பாமக மாவட்ட நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் பங்கேற்ற அக்கட்சியின் மாநிலத் தலைவர் ஜி.கே.மணி செய்தியாளர்களிடம் கூறிய தாவது:
காவிரி பிரச்சினையில் தமிழகத் தின் பாதிப்பை உணர்ந்து, காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடி யாக அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். முட்டைத் தொழிலை பாதுகாக்க நாமக்கல் மாவட்டத்தில் குளிர்பதன கிடங்கு அமைக்க வேண்டும்.
தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச்சாவடிகளில் நிர்ணயிக்கப்பட்ட தொகையைவிட அதிகமாகவும், ஆண்டுதோறும் கட்டணத்தை உயர்த்தியும், ஒருசில இடங்களில் காலக்கெடு முடிந்தும் கட்டணம் வசூலிக்கின்றனர். விவசாயிகளின் வாகனங்கள், பள்ளி மற்றும் கல்லூரி வாகனங்கள், பால் பொருட்கள் வாகனங்களுக்கு சுங்கச்சாவடி கட்டணத்தில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.
தஞ்சாவூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம் சட்டப்பேரவைத் தொகுதிகளில் நடைபெற உள்ள தேர்தலில் பாமக தனித்து போட்டி யிடும். வேட்பாளர்கள் விரைவில் தேர்வு செய்யப்படுவார்கள். தேர்தலை முறைகேடு இல்லாமல், சுதந்திரமாகவும் நேர்மையாகவும் நடத்த தேர்தல் சீர்திருத்தம் செய்ய வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.