

தஞ்சை தொகுதி தேர்தலையொட்டி நேற்று நடத்தப்பட்ட பறக்கும்படை சோதனையில் காரில் உரிய ஆவணமின்றி கொண்டுவரப்பட்ட ரூ.15 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
தஞ்சாவூர் சட்டப்பேரவைத் தொகுதிக்கு வரும் நவ.19-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதையடுத்து தஞ்சாவூர் தொகுதியில் 13 இடங்களில் தற்காலிக சோதனைச் சாவடிகள் அமைக்கப்பட்டு வாகனங்கள் சோதனையிடப்படுகின்றன. இதற்காக வருவாய்த் துறை, காவல்துறை அதிகாரிகளைக் கொண்ட பறக்கும்படைகள் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், நேற்று காலை திருச்சியில் இருந்து தஞ்சாவூர் நோக்கி வந்த காரை துணை வட்டாட்சியர் கண்ணன் தலைமையிலான பறக்கும்படையினர் தடுத்து நிறுத்தினர். காரில் ரூ.15 லட்சம் ரொக்கம் இருந்தது தெரியவந்தது. கார் ஓட்டுநர் கோவையைச் சேர்ந்த முகமதுசாஜித்திடம் விசாரித்தபோது, கோவையில் உள்ள பிளைவுட் நிறுவனத்தில் வேலை பார்த்து வருவதாகவும் தஞ்சாவூரில் மரம், பிளைவுட் வாங்குவதற்கு இந்த பணத்தை கொண்டுவந்ததாகவும் கூறினார். ஆனால் அதற்கான ஆவணங்கள் ஏதும் இல்லாததால் அதிகாரிகள் பணத்தை பறிமுதல் செய்து தஞ்சாவூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர்.