

இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில்திட்டப்பணி காரணமாக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 'நம்ம சென்னை' செல்ஃபி மேடை இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்துமூடப்பட்டது.
சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டப்பணி 3 வழித்தடங்களில் 118.9 கி.மீ. தொலைவுக்கு நடைபெறுகிறது. இதில் ஒரு வழித்தடமான கலங்கரைவிளக்கம்-பூந்தமல்லி வரையிலான திட்டத்தில் கோடம்பாக்கம் பவர்ஹவுஸ் முதல் கலங்கரை விளக்கம்வரை சுரங்கப்பாதையாக் அமையஉள்ளது.
இதற்காக, கலங்கரை விளக்கம் பகுதியில் சுரங்கப்பாதை அமைப்பதற்கான ஆரம்பக்கட்டப் பணிகள் கடந்த சில வாரங்களுக்கு முன்பு தொடங்கின. தற்போது பல்வேறு இடங்களில் பணிகள் துரிதமாக நடைபெற்று வருகின்றன.
இந்நிலையில், மெட்ரோ ரயில் பணிக்காக, சென்னை மெரினா கடற்கரையில் உள்ள 'நம்ம சென்னை' செல்ஃபி மேடை இரும்பு தடுப்பு வேலிகள் அமைத்து மூடப்பட்டது.
கலங்கரை விளக்கம் முதல் நம்ம சென்னை செல்ஃபி மேடை வரை இரும்பு தடுப்பு வேலிகள், பலகைகள் அமைக்கப்பட்டு உள்ளன. இதனால் இங்கு செல்ஃபி எடுக்க வந்த பொதுமக்கள் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர். இப் பணிகள் முடியும் வரை இந்த செல்ஃபி மேடை திறக்கப்படாது என்று மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர்.