Published : 05 Sep 2022 04:20 AM
Last Updated : 05 Sep 2022 04:20 AM
வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை நிலத்தடியில் சேமிக்கும் வகையில் உறிஞ்சுகுழிகள் அமைத்ததன் மூலம் வேடந்தாங்கல் அடுத்த வெள்ளப்புத்தூர் முன்மாதிரி கிராமமாக விளங்கி வருகிறது.
செங்கல்பட்டு மாவட்டம், வெள்ளப்புத்தூர் ஊராட்சியில் குடியிருப்புகளில் இருந்து வெளியேறும் வீட்டு உபயோக கழிவுநீரை தெருக்களில் தேங்கவிடாமல் வீடுதோறும் உறிஞ்சுகுழிகள் அமைத்து நிலத்தடி நீர்மட்டத்தை உயர்த்த திட்டமிடப்பட்டது.
இதற்காக, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் முதற்கட்டமாக நூறு வீடுகளில் உறிஞ்சுகுழிகள் அமைக்க தலா ரூ.9 ஆயிரம் வீதம் மொத்தம் ரூ.9 லட்சம் நிதி ஒதுக்கிடு செய்யப்பட்டது.
இதன்மூலம், வீட்டு உபயோக கழிவுநீர் முழுவதும் உறிஞ்சுகுழியை சென்றடைகின்றன. இதனால், நிலத்தடியில் நீர் சேமிக்கப்படுவதால் கிராமப்பகுதியில் நிலத்தடி நீர்மட்டம் உயரும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.
இதேபோல், இருளர் மக்கள் குடியிருப்பு உள்ளிட்ட 300 குடியிருப்புகளில் ‘கிச்சன் கார்டன்’ என்ற திட்டத்தை செயல்படுத்தி சிறியளவில் தோட்டம் அமைத்து, வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுநீர் தோட்டங்களுக்கு செல்லும் வகையில் அமைக்கப்படுகிறது.
இதுகுறித்து, ஊராட்சி மன்ற தலைவர் வரதன் கூறும்போது, “குடியிருப்புகளின் அருகே கழிவுநீர் வழிந்தோடி சுகாதார சீர்கேடு ஏற்படக்கூடாது என்பதால் வீடுகள், பொது இடங்களில் உறிஞ்சுகுழி கட்டமைப்புகள் ஏற்படுத்தியுள்ளோம். இதன்மூலம், நிலத்தடி நீர்மட்டம் உயரும்.
ஏற்கெனவே, தேசிய நீர் மேலாண்மை திட்டத்தில் நிலத்தடிநீர் சேமித்ததற்காக குடியரசு தலைவரிடம் கடந்த 2020-ம் ஆண்டு 2-ம் பரிசு பெற்றுள்ளோம்” என்றார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT