Published : 05 Sep 2022 04:20 AM
Last Updated : 05 Sep 2022 04:20 AM

மெட்ரோ ரயில் பணி: பூந்தமல்லியில் போக்குவரத்து மாற்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிப்பு

திருவள்ளூர்

மெட்ரோ ரயில் பணிக்காக பூந்தமல்லியில் செய்யப்பட்டுள்ள போக்குவரத்து மாற்றம் மேலும்6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டம் பூந்தமல்லி பேருந்து நிலையம் முதல் கரையான்சாவடி வரை உள்ள சென்னை - பூந்தமல்லி டிரங்க் சாலையில், மெட்ரோ ரயில் திட்டப் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக, இப்பகுதியில் கடந்த மே 4-ம் தேதி முதல் நேற்றுமுன்தினம் (3-ம் தேதி) வரை தற்காலிக போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டது.

இந்நிலையில், இந்த போக்குவரத்து மாற்றம் மேலும் 6 மாதங்களுக்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, கரையான்சாவடியில் இருந்து பூந்தமல்லி டிரங்க் சாலை வழியாக பூந்தமல்லி பேருந்து முனையம் செல்ல கனரக வாகனங்களுக்கு அனுமதி இல்லை. அதேசமயம் ஆம்புலன்ஸ், இலகுரக மற்றும் இருசக்கர வாகனங்கள் அனுமதிக்கப்படும்.

போரூரில் இருந்து பூந்தமல்லி செல்லும் அனைத்து அரசு மற்றும் தனியார் பேருந்துகள் கரையான்சாவடி சந்திப்பில் வலப்புறம் திரும்பி ஆவடி சாலை வழியாக சென்னீர்குப்பம் சென்று பூந்தமல்லி புறவழிச் சாலையில் திரும்பி பூந்தமல்லி பாலம் அருகில் டாக்டர் அம்பேத்கர் சிலைக்கு இடதுபுறமாகச் சென்று பேருந்து முனையத்தை அடைய வேண்டும்.

இதர வணிக மற்றும் கனரக வாகனங்கள் குமணன்சாவடி சந்திப்பில் இருந்து வலதுபுறம் சென்று சவீதா பல் மருத்துவமனை சந்திப்பு வழியாக தங்கள் இலக்கை அடைய பூந்தமல்லி புறவழிச் சாலையில் இடதுபுறம் திரும்பி சென்னை - பெங்களூரூ தேசிய நெடுஞ்சாலையை அடையலாம்.

இதேபோல் போரூர், கோயம்பேடு, மதுரவாயல் மற்றும் மாங்காடு பகுதிகளில் இருந்து பூந்தமல்லி செல்லும் வாகனப் போக்குவரத்திலும் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக ஆவடி காவல் ஆணையரகம் தெரிவித்துள்ளது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x