

மருத்துவக் கழிவுகளை அழிக்கும் விவகாரத்தில் விதிமீறலில் ஈடுபட்ட நிறுவனத்தின் மீது குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்துக்கு தேசிய பசுமை தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்திலுள்ள அனைத்து மருத்துவமனைகளிலும் திரவ மருத்துவக் கழிவுகளை சுத்தி கரிக்கும் நிலையங்களை அமைக்கக் கோரி திருவான் மியூரைச் சேர்ந்த ஜவஹர்லால் சண்முகம் என்பவர் தேசிய பசுமை தீர்ப்பாயத்தின் தென் மண்டல அமர்வில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்நிலையில் இம்மனு அமர் வின் நீதித்துறை உறுப்பினர் நீதிபதி பி.ஜோதிமணி, தொழில்நுட்ப உறுப்பினர் பி.எஸ்.ராவ் ஆகியோர் முன்னிலையில் நேற்று விசாரணைக்கு வந்தது.
அப்போது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் யாஸ்மின் அலி தாக்கல் செய்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:
மாசுக் கட்டுப்பாட்டு வாரியத் தலைவர் தலைமையில், தமிழ்நாடு மருத்துவக் கல்லூரி இயக்குநரகம், இந்திய மருத்துவர் சங்கம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்ற கூட்டம், கடந்த செப்டம்பர் 22-ம் தேதி சென்னையில் நடைபெற்றது. அதில், அந்தந்த மருத்துவமனைகளில் தினமும் வெளியேற்றப்படும் மருத்துவக் கழிவுகளின் விவரங்கள் குறித்து, அந்தந்த நிறுவனங்களின் இணையதளத்தில் அன்று வெளியிட வேண்டும். பெறப்படும் மருத்துவக் கழிவுகள் குறித்து, அங்கீகாரம் பெற்ற மருத்துவக் கழிவுகள் அழிக்கும் நிறுவனங்களும் அதன் இணையதளத்தில் வெளியிட வேண்டும். இந்த நிறுவனங்கள், கழிவுகளை வழங்கும் மருத்துவமனைகளுக்கு பார்கோடு வசதியை வழங்க வேண்டும். அதை கழிவுகளை கொட்டும் பைகளில் ஒட்ட வேண்டும். இந்த நடைமுறைகள் நவம்பர் 1-ம் தேதி முதல் அமலுக்கு வர வேண்டும். அனைத்து மருத்துவமனைகளிலும், கழிவுநீர் மற்றும் திரவ மருத்துவக் கழிவுகள் சுத்திகரிப்பு நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என 9 வகையான அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
மேலும், உரிய அனுமதியின்றி மருத்துவமனைகளில் மருத்துவக் கழிவுகளைப் பெற்ற நிறுவனத்தின் உரிமத்தை ரத்து செய்யுமாறு, சென்னை மாநகராட்சியை அறிவுறுத்தியிருக்கிறோம் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
அப்போது குறுக்கிட்ட மனு தாரர், ஜவஹர்லால் சண்முகம், மருத்துவக் கழிவுகளை அழிக்கும் விவகாரத்தில், மாசுக் கட்டுப்பாட்டு வாரியத்தின் மீது நம்பிக்கை இல்லை. பிளாஸ்டிக் மருத்துவக் கழிவுகள், சுத்தப்படுத்தப்பட்டு, மீண்டும் பயன்பாட்டுக்கு அனுப்பப்படுகிறதோ என்ற அச்சம் ஏற்படுகிறது. இந்த விவகாரம் தொடர்பாக ஒரு மருத்துவமனை மீது நடவடிக்கை எடுப்பதை விட்டுவிட்டு, அனைத்து மருத்துவமனைகளிலும் நடை பெறும் தவறுகள் குறித்து, காவல் துறை விரிவான விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார்.
அறிக்கை
பின்னர், “மருத்துவக் கழிவு களை அழிப்பதில் விதிமீறலில் ஈடுபட்ட தனியார் நிறுவனத்தின் மீது மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் குற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மருத்துவக் கழிவு தொடர்பாக மருத்துவமனைகளின் இணையதளங்களை தொடர்ந்து கண்காணித்து, முரண்பாடுகள் காணப்பட்டால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும். அது தொடர்பான அறிக்கையை அமர்வில் தாக்கல் செய்ய வேண்டும்” என்று அமர்வின் உறுப்பினர்கள் உத்தரவிட்டனர்.
மனு மீதான விசாரணை டிசம்பர் 12-ம் தேதிக்கு ஒத்திவைக்கப் பட்டது.