Published : 04 Oct 2016 08:42 AM
Last Updated : 04 Oct 2016 08:42 AM

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு: அனைத்துக் கட்சித் தலைவர்கள் கண்டனம்

காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் பதில் மனு தாக்கல் செய்துள்ள மத்திய அரசுக்கு தமிழக அரசியல் கட்சித் தலைவர்கள் கண்டனம் தெரி வித்துள்ளனர்.

இது தொடர்பாக நேற்று வெளியிட்ட அறிக்கை:

திமுக தலைவர் கருணாநிதி:

காவிரிப் பிரச்சினையில் கடந்த 30-ம் தேதி உச்ச நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவில், அக்டோபர் 4-ம் தேதிக்குள் காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும் என உத்தரவிட்டிருந்தது. ஆனால், மத்திய அரசின் சார்பில் உச்ச நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், காவிரி மேலாண்மை வாரியத்தை உடனடியாக அமைக்க முடியாது. வாரியத்தை அமைக்குமாறு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட முடியாது. காவிரியில் தண்ணீர் திறந்து விடுமாறு செப்டம்பர் 20, 30 தேதிகளில் பிறப்பித்த உத்தரவில் திருத்தம் செய்ய வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி கள், காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க கடந்த வாரம் மத்திய அரசு ஒப்புக் கொண்டது ஏன் என கேள்வி எழுப்பியிருக்கிறார்கள். அதற்கு மத்திய அரசு வழக்கறிஞர், அப்போது தவறிழைத்து விட்டோம் என கூறியிருக்கிறார்.

மங்கை சூதகமானால் கங்கை யில் மூழ்கலாம். ஆனால், கங்கையே சூதகமானால் எங்கே மூழ்குவது? என்பதைப் போல மத்திய அரசின் செயல்பாடுகள் உள்ளன. மத்தியில் ஆட்சியில் இருப்பவர்கள் கர்நாடக மாநிலத்தில் நடைபெறவுள்ள தேர் தலை மனதில் கொண்டு இந்த திடீர் முடிவை எடுத்துள்ளனர். நடுநிலை தவறி முழுக்க முழுக்க கர்நாடகத்தின் குரலை எதிரொ லிக்கும் ஊதுகுழலாக செயல்பட் டுள்ளது மிகவும் கண்டிக்கத்தக்கது.

மத்திய அரசு மற்றும் கர்நாடக அரசின் முடிவை தமிழகத்தில் உள்ள அனைவரும் ஒன்றிணைந்து எதிர்க்க வேண்டும். நெருக்கடியான இந்த நிலையிலாவது தமிழக அரசு அனைத்துக் கட்சிக் கூட்டத்தையும், சட்டப்பேரவை சிறப்புக் கூட்டத் தையும் கூட்ட வேண்டும்.

பாமக நிறுவனர் ராமதாஸ்:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என உச்ச நீதிமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்திருப்பது கடும் கண்டனத்துக்குரியது. வாரி யத்தை அமைக்குமாறு 2 நீதிபதி கள் கொண்ட அமர்வு உத்தரவிட முடியாது என்றும், நாடாளு மன்றத் தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.

ஒரு வழக்கு 3 நீதிபதிகள் கொண்ட அமர்வில் இருக்கிறது என்பதற்காக, அது தொடர்பாக மற்ற வழக்குகளில் 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு தீர்ப்பளிக்கக் கூடாது என்று எந்தச் சட்டத்திலும் கூறப்படவில்லை. நாடாளுமன்றத்தின் ஒப்புதல் பெறாமலேயே பக்ரா பியால் மேலாண்மை வாரியம் ஏற்கெனவே அமைக்கப்பட்டுள்ளது. இல்லாத சிக்கலை இருப்பதாகக் கூறி காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பது தமிழகத் துக்கு இழைக்கப்படும் துரோக மாகும்.

இந்தப் பிரச்சினையில் அடுத்த கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி கூட்டத்தை தமிழக அரசு கூட்ட வேண்டும்.

மதிமுக பொதுச் செயலாளர் வைகோ:

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றிய பிறகே காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியும் என மத்திய அரசு தெரி வித்திருப்பது கடும் கண்டனத்துக்கு உரியது. இத்தனை ஆண்டுகளாக இது குறித்து எதுவும் தெரிவிக்காத மத்திய அரசு, இப்போது ஒரு புதிய காரணத்தை கண்டுபிடித்துள்ளது. சட்டவிரோதமாகச் செயல்படும் கர்நாடக அரசுக்கு மத்திய பாஜக அரசு துணை நிற்கிறது. மோடி அரசின் உள்நோக்கம் வெட்ட வெளிச்சமாகி விட்டது.

உச்ச நீதிமன்றத்தை மதிக்காத மோடி அரசு, இந்திய அரசியல் சட் டத்தையே கேலிக்கூத்தாக்கிவிட் டது. மத்திய அரசு நியாயமாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்துவிட்டது. மோடி அரசின் இந்த துரோகத்தை தமிழக மக்கள் மன்னிக்க மாட்டார்கள். அனைவரும் ஒன்றிணைந்து மத்திய அரசுக்கு எதிராகப் போராட வேண்டும்.

மார்க்சிஸ்ட் மாநிலச் செயலாளர் ஜி.ராமகிருஷ்ணன்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும் என்ற காலக்கெடு முடிய ஒரு நாளே இருக்கும் நிலையில், வாரியம் அமைக்க முடியாது என மத்திய அரசு உச்ச நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. வாரி யம் அமைக்க நீதிமன்ற தடை இருப்பதாக தமிழக பாஜக தலைவர்கள் தவறான முறை யில் பிரச்சாரம் செய்து வந்தனர். தற்போது உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டும் வாரியம் அமைக்க மாட்டோம் என மத்திய அரசு கூறியுள்ளது.

இதற்காக மத்திய அரசு கூறும் காரணங்கள் ஏற்புடையது அல்ல. அரசமைப்புச் சட்டத்தின் பாதுகாவலனாக, அரசியல் கடந்து செயல்படுவதை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும்.

இந்திய கம்யூனிஸ்ட் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன்:

உச்ச நீதிமன்ற உத்தரவை நிறை வேற்றுவதில் முன் மாதிரியாக செயல்பட வேண்டிய மத்திய அரசு, நிலை தடுமாறியிருப்பது கண்டனத்துக்குரியது. இதன் மூலம் மத்திய அரசு நியாயமாக நடந்துகொள்ளும் என்ற நம்பிக்கை தகர்ந்துள்ளது. மத்திய அரசு தனது முடிவை மறுபரிசீலனை செய்து உச்ச நீதிமன்ற உத்தரவுப்படி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க வேண்டும்.

திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி:

காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. உச்ச நீதிமன்ற தீர்ப்பை செயல்படுத்த மறுப்பதன் மூலம் அரசியல் சட்டத்தின் கடமையைச் செய்யத் தவறும் முதல் குற்றத்தை மத்திய அரசு செய்துள்ளது. இது ஜனநாயகத்துக்கும், கூட்டாட்சி தத்துவத்துக்கும் விரோதமானது. தமிழகத்துக்கு மோடி அரசு இழைக்கும் துரோகமாகும்.

தமாகா தலைவர் ஜி.கே.வாசன்:

நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்ற வேண்டும் எனக் கூறி காவிரி மேலாண்மை வாரியத்தை அமைக்க முடியாது என மத்திய அரசு தெரிவித்துள்ளது கடும் கண்டனத்துக்குரியது. இது குறித்து அனைத்துக்கட்சி தலைவர்கள், எம்.பி.க்களோடு பிரதமரை சந்தித்து முறையிட வேண்டும் என வாசன் கூறியுள்ளார்.

விசிக தலைவர் திருமாவளவன்:

காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க மத்திய அரசு மறுப்பு தெரிவித்து மனுதாக்கல் செய் திருப்பது அதிர்ச்சி அளிக்கிறது. இது கடும் கண்டனத்துக்குரியது. மத்திய அரசே உச்ச நீதிமன்றத்தை அவமதிக்கும் வகையில் செயல் படும்போது கர்நாடக மாநில அரசு எப்படி உச்சநீதிமன்றத்தை மதிக்கும். கர்நாடகத்தில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற இருப்பதால் அரசியல் ஆதாயம் கருதி தமிழகத்துக்கு மத்திய அரசு மாபெரும் துரோகம் இழைக்கிறது. அரசியல் உள் நோக்கம் கொண்ட இந்த நிலைப்பாட்டை மத்திய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும்.

மனிதநேய மக்கள் கட்சியின் தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா, தமிழர் தேசிய முன்னணியின் தலைவர் பழ.நெடுமாறன், தமிழக வாழ்வுரிமை கட்சி தலைவர் தி.வேல்முருகன், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாநிலத் தலைவர் தெகலான் பாகவி உள்ளிட்டோர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மத்திய அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்துள்ளனர்.

வாரியத்தை அமைக்குமாறு 2 நீதிபதிகள் கொண்ட அமர்வு உத்தரவிட முடியாது என்றும், நாடாளுமன்றத்தின் ஒப்புதல் இல்லாமல் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க முடியாது என்ற மத்திய அரசின் வாதத்தை ஏற்க முடியாது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x