Published : 04 Sep 2022 06:23 PM
Last Updated : 04 Sep 2022 06:23 PM

ஓணம் பண்டிகைக்கு கேரளா செல்லும் மதுரை மல்லிகை: பற்றாக்குறையால் கிலோ ரூ.2,300க்கு விற்பனை

பிரதிநிதித்துவப் படம்.

மதுரை: உற்பத்தி குறைவாக உள்ளதால் ஓணம் பண்டிகைக்கு இந்த ஆண்டு மிக குறைவான மதுரை மல்லிகைப் பூக்களே கேரளா செல்கின்றன. கேரளா வியாபாரிகள் வருகை மற்றும் முகூர்த்த நாட்களால் நேற்று மதுரை மல்லிகைப்பூ கிலோ ரூ.2,500க்கு விற்பனையானது.

கேரளாவில் ஓணம் பண்டிகை ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு வரும் 8ஆம் தேதி ஓணம் பண்டிகை கொண்டாடப்பட உள்ளது. கேரளா மக்கள் 10 நாட்களுக்கு வீட்டின் முன் வண்ண மலர்களால் கோலமிட்டு ஓணம் பண்டிகையை வரவேற்பார்கள். இந்த பண்டிகையை சிறப்பிக்க தமிழகத்தில் இருந்து ஒவ்வொரு மாவட்டத்தை சேர்ந்த சிறப்பு வாய்ந்த பூக்கள், கேரளாவுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படும்.

அந்த வகையில் மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் இருந்து கேரளாவுக்கு இந்த பண்டிகை நாட்களில் அதிகமான மல்லிகைப்பூக்கள் விற்பனைக்கு செல்லும். கேரளா வியாபாரிகளே நேரடியாக விவசாயிகள் தோட்டத்திற்கு சென்று மொத்தமாக வாங்கி செல்வதும் வழக்கம். சில வியாபாரிகள் மாட்டுத்தாவணி பூ மார்க்கெட்டிற்கும், திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டிற்கும் சென்று மல்லிகைப்பூக்களை கொள்முதல் செய்வார்கள்.

ஆனால், கரோனாவுக்கு பிறகு மதுரை, திண்டுக்கல், ராமநாதபுரம் மாவட்டங்களில் மல்லிகை பூ உற்பத்தி குறைந்தது. கரோனா தொற்று காலங்களில் மல்லிகைப்பூ தோட்டங்களை பராமரிக்காமலே விவசாயிகள் கைவிட்டனர். மதுரை மாவட்டத்தில் 50 சதவீதம் மல்லிகைத்தோட்டங்கள் அழிந்தன. தற்போது சந்தைகளுக்கு வரும் பூக்கள், மீதமுள்ள தோட்டங்களில் இருந்தே விற்பனைக்கு வருகின்றன. மாட்டுத்தாவணி மலர் சந்தைக்கு தற்போது 1 முதல் 1 1/2 டன் மதுரை மல்லிகைப்பூக்கள் மட்டுமே விற்பனைக்கு வருகிறது.

அதனால், பற்றாக்குறையால் ஓணம் பண்டிகைக்கே இந்த முறை மிக குறைவான மதுரை மல்லிகைப்பூக்களே செல்கின்றன.
மாட்டுத்தாவணி பூ மார்க்கெட் வியாபாரி ஷாஜகான் கூறுகையில், ''ஓணம் பண்டிகைக்கு பராம்பரியமாக மதுரை மல்லிகைப்பூ கொண்டு செல்லப்படும். அதுபோல் இந்த ஆண்டும் விற்பனைக்கு நடைபெற உள்ளது. உள்ளூர் விற்பனைக்கே பூக்கள் பற்றாக்குறையாக உள்ளதால் ஓணம் பண்டிகைக்கு மிக குறைவான பூக்கள் இந்த முறை செல்கிறது. ஓணம் பண்டிகையால் கேரளா வியாபாரிகள் வருகை, முகூர்த்த நாட்களால் நேற்று மதுரை மல்லிகை ரூ.2,500 விற்பனையானது'' என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x