Published : 04 Sep 2022 06:10 PM
Last Updated : 04 Sep 2022 06:10 PM

வ.உ.சி 151-வது பிறந்தநாள் | செக்கிழுத்த செம்மலின் தியாக வரலாற்றைப் போற்றுவோம்: வைகோ, ராமதாஸ் புகழாரம்

வ.உ.சி | வைகோ | ராமதாஸ்

சென்னை: செப்டம்பர் 5 அன்று இந்திய விடுதலைப் போராட்டத் தியாகி வ.உ.சிதம்பரனாரின் 151வது பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ மற்றும் பாமக நிறுவனர் ராமதாஸ் ஆகியோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது: இந்திய விடுதலைப் போராட்ட வரலாற்றில் ஈடு இணையற்ற தியாகங்களை செய்த செக்கிழுத்தச் செம்மல் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் பிறந்தநாள் நூற்றி ஐம்பதாவது ஆண்டு இன்று நிறைவடைகிறது. நாளை அவருக்கு 151-ஆவது பிறந்தநாள். தன்னை வருத்திக் கொண்டும், தமது செல்வங்களை இழந்தும் இந்திய விடுதலைக்காக போராடிய ஈடு இணையற்ற தலைவருக்கு மரியாதை செலுத்த இது சிறந்த வாய்ப்பாகும்.

வ.உ.சி வரலாறு: இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆங்கிலேயர்களை மிகக்கடுமையாக எதிர்த்த தலைவர்களில் மிகவும் முக்கியமானவர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார். தூத்துக்குடி மாவட்டம் ஒட்டப்பிடாரத்தில் வசதியான குடும்பத்தில் பிறந்த வ.உ.சிதம்பரம் பிள்ளை பட்டப்படிப்பையும், சட்டப் படிப்பையும் படித்துத் தேர்ந்தார். மிகச்சிறந்த வழக்கறிஞராக உருவெடுத்த அவர், ஏழைகளுக்காக இலவசமாக வாதிட்டவர்.

தேசியகவி பாரதியாருடன் இளம் வயதில் ஏற்பட்ட நட்பு காரணமாக விடுதலை இயக்கத்தில் தம்மை அவர் ஈடுபடுத்திக் கொண்டார். காந்தியடிகளுக்கு முன்பே விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்ட சிதம்பரம் பிள்ளை, தென் மாவட்டங்களில் மிகச்சிறந்த தொழிற்சங்கவாதியாகவும் திகழ்ந்தவர் ஆவார். ஆங்கிலேயர்களுக்கு எதிரானப் போரில் எந்த சமரசமும் செய்து கொள்ளாதவர். வணிகம் செய்வதாகக் கூறி இந்தியாவுக்குள் வந்தவர்களை, வணிகம் மூலமாகவே வீழ்த்தி நாட்டை விட்டு விரட்ட வேண்டும் என்று போராடியவர் வ.உ.சி அவர்கள். ஆங்கிலேயர்களுக்கு எதிராக அவர் தொடங்கிய சுதேசி கப்பல் நிறுவனத்தின் வெற்றியும், அவரது ஆதரவுடன் நடைபெற்ற தூத்துக்குடி நூற்பாலை வேலைநிறுத்தப் போராட்டத்தின் வெற்றியும் ஆங்கிலேயர்களை நடுங்க வைத்தது.

சிறைக் கொடுமைகள்: அதனால் வ.உ.சி கடுமையான அடக்குமுறைகளுக்கும் கொடுமைக்கும் ஆளானார். நமக்கு விடுதலை பெற்றுத் தருவதற்காக அவர் செய்த தியாகங்களுக்கு உரிய மரியாதையும், அங்கீகாரமும் இன்னும் அவருக்கு வழங்கப்படவில்லை. கோவை சிறையில் அடைக்கப்பட்டிருந்த காலத்தில் அவர் செக்கு இழுத்த கொடுமை குறித்து நாம் தொடர்ந்து பேசி வருகிறோம். ஆனால், அது அவருக்கு வழங்கப்பட்ட மாற்று தண்டனை தான். அதைவிட கொடுமையான தண்டனைகளையும் சிறையில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அனுபவித்துள்ளார்.

சிறையில் அவருக்கு சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்றும் பணி முதலில் வழங்கப்பட்டிருக்கிறது. அந்தப் பணியின் போது, அவரது கைத்தோல் உரிந்து ரத்தம் வடிந்திருக்கிறது. எதற்கும் கலங்காதவரான வ.உ.சி அந்த தண்டனை மற்றும் அதனால் ஏற்பட்ட உடல்நல பாதிப்புகளை எண்ணி கண்ணீர் வடித்தார். சணல் பிரிக்கும் எந்திரத்தை சுழற்ற அவரது உடல்நிலை இடம் தராத நிலையில் தான் அவருக்கு மாற்று தண்டனையாக செக்கு இழுக்கும் பணி வழங்கப்பட்டுள்ளது. சிறையில் மாடுகளை விட மோசமாக கொடுமைப்படுத்தப்பட்டவர் கப்பலோட்டிய தமிழர் வ.உ.சிதம்பரம் பிள்ளை ஆவார்.

வ.உ.சி. 150வது ஆண்டு விழா: வ.உ.சியின் பிறந்த நாள் 150-ஆவது ஆண்டு விழா கடந்த ஆண்டு செப்டம்பர் 5-ஆம் தேதி முதல் கடந்த ஓராண்டாக தமிழக அரசால் கொண்டாடப்பட்டு வருகிறது. வ.உ.சி 150 விழாவை மத்திய, மாநில அரசுகள் ஓராண்டுக்கு கொண்டாட வேண்டும். அந்த ஓராண்டு காலத்தில் வ.உ.சி.யின் தியாக வரலாற்றையும், போராட்டக் குணத்தையும், அவர் அனுபவித்தக் கொடுமைகளையும் இந்திய மக்கள் தெரிந்து கொள்ளும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கு ஏற்பாடுகளை செய்ய வேண்டும்.

பள்ளி, கல்லூரி பாட நூல்களில் வ.உ.சிதம்பரம் பிள்ளையின் தியாக வரலாற்றை சேர்க்க வேண்டும். நாடாளுமன்ற வளாகத்தில் வ.உ.சிதம்பரம் பிள்ளை அவர்களின் உருவச்சிலையை திறக்க வேண்டும்; சென்னை உத்தண்டியில் செயல்பட்டு வரும் கடல்சார் பல்கலைக்கழகத்திற்கும், கடற்படை கப்பலுக்கும் அவரது பெயரைச் சூட்ட வேண்டும்; சென்னையில் வ.உ.சி வாழ்ந்த இல்லங்களை மக்கள் அறிந்து கொள்ளும் வகையில் அவற்றுக்கு வெளியில் நினைவுப் பலகைகளை அமைக்க வேண்டும்; சென்னையில் வ.உ.சி 150ஆவது ஆண்டு விழாவை குறிக்கும் வகையில் நினைவு அலங்கார வளைவு ஒன்றையும் அமைக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல கோரிக்கைகளை முன்வைத்தோம்.

அவற்றை மத்திய, மாநில அரசுகள் முழுமையாக நிறைவேற்றவில்லை என்றாலும் கூட முடிந்தவரை நிறைவேற்றியுள்ளன. அதற்காக மத்திய, மாநில அரசுகளுக்கு பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

கடமை முடியவில்லை: இந்திய விடுதலைக்காக வ.உ.சி செய்த தியாகம் ஈடு இணையற்றது. அவரது 150-ஆவது ஆண்டு விழாவையொட்டி நாம் முன்வைத்த கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றப்படும் வரை அவற்றுக்காக நாம் குரல் கொடுத்துக் கொண்டே இருப்போம். வ.உ.சிதம்பரம் பிள்ளையின் வரலாற்றை மக்களிடம் கொண்டு செல்லும் வகையிலும், மரியாதை செலுத்தும் வகையிலும் வரும் செப்டம்பர் 5-ஆம் தேதி அவரது 151-ஆவது பிறந்த நாளில் அவரது உருவச்சிலைகளுக்கும், அவரது படங்களை வைத்தும் பாட்டாளி சொந்தங்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்த வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.'' இவ்வாறு ராமதாஸ் தெரிவித்துள்ளார்.

வ.உ.சி.பிறந்தநாளை முன்னிட்டு மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளதாவது: கப்பலோட்டிய தமிழர் வ.உ.சி விரிபுகழ் விண்ணுயர்ந்து நிற்கும். செக்கிழுத்த செம்மல், கப்பலோட்டிய தமிழன், தென்னாட்டுத் திலகர், கன்னித் தமிழ் வளர்த்த கவிஞர் என்று போற்றப்படும் வ.உ.சிதம்பரனார் நெல்லை மாவட்டத்தில் உள்ள ஒட்டப்பிடாரம் என்னும் சிற்றூரில் உலகநாதன், பரமாயி அம்மையாருக்கும் 1872 - ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 5 ஆம் நாள் பிறந்தார்.

ஒட்டப்பிடாரத்தில் பள்ளிப் படிப்பையும், தூத்துக்குடி புனித சேவியர் பள்ளியில் உயர்நிலை கல்வியையும், திருநெல்வேலி இந்து கல்லூரியில் பட்டப் படிப்பையும் முடித்தார். பின்னர் திருச்சியில் சட்டம் பயின்று 1895இல் ஒட்டப்பிடாரத்தில் வழக்கறிஞர் தொழில் தொடங்கினார். வழக்கறிஞர் தொழிலில் உயர்ந்து விளங்கினாலும், நாடு ஆங்கிலேயருக்கு அடிமைப் பட்டு கிடப்பது பற்றியே அவரது சிந்தை முழுவதும் நிரம்பி இருந்தது.

1908ஆம் ஆண்டு நடந்த கோரல் நூற்பாலை நிறுவனத்தின் தொழிலாளிகள் முன்னெடுத்த 9 நாள் வேலை நிறுத்தம், ஆங்கிலேயர்களை நிலைகுலைய செய்தது. 12 வயதுக்கு உட்பட்ட சிறுவர்களை வேலைக்கு அமர்த்துவது, மிகக் குறைந்த கூலி தருவது, விடுமுறை நாட்கள் தடுப்பது போன்ற பல தொழிலாளர் விரோத செயல்கள் கோரல் ஆலையில் நடைபெற்றன. உச்ச கட்டமாக காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை வேலை வாங்கப்பட்டு, தொழிலாளர்கள் உழைப்பு சுரண்டப்பட்டது.

கையில் கைரேகை பார்க்க இயலும் காலை நேரம் முதல், மாலை நேரம் வரை நூற்பாலை ஓட்டியதால் 'ரேகை பார்த்து ஓட்டுதல்' என்றே இந்த கொடுமை அழைக்கப்பட்டது. இவற்றை எதிர்த்து தொழிலாளர்களைத் திரட்டி வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டார் வ.உ.சி.

9 நாள் நடைபெற்ற போராட்டத்தில் பெரிய நிதி திரட்டி, வேலை நிறுத்தத்தில் ஈடுபட்ட தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு அளித்ததன் காரணத்தினால், அந்த வேலை நிறுத்தத்தின் வீரியம் குறையாமல் பார்த்துக் கொண்டார். வேலை நிறுத்தத்தினை தடுக்க இயலாத ஆங்கிலேய அரசு போராட்டத்தின் கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டது.

இந்தியாவின் செல்வ வளங்களை கொள்ளையடிக்கும் ஆங்கிலேய அரசை எதிர்த்து பேசத்தொடங்கிய வ.உ.சி., 'பிரிட்டிஷ் இந்திய டீம் நேவிகேஷன் கம்பெனி' என்ற ஆங்கிலேய கப்பல் சரக்கு மற்றும் போக்குவரத்து நிறுவனத்தை எதிர்த்து 'சுதேசி நாவாய்ச் சங்கம்' என்ற நிறுவனத்தைத் தொடங்கினார். அதன் மூலம் 2 கப்பல்களை வாங்கி இலங்கை இந்தியா இடையே கப்பல் போக்குவரத்தை தொடங்கினார். இது ஆங்கிலேய அரசுக்கு பெரும் அதிர்வை ஏற்படுத்தியது.

இதைத் தொடர்ந்து ஆங்கிலேய அரசால் வ.உ.சி. மீது தேசத்துரோக வழக்கு பதியப்பட்டது. அவரது கப்பல் நிறுவனம் முடக்கப்பட்டது. சொத்துக்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சிறையில் கொடுமையான தண்டனையாக மாடுகளால் இழுக்கப்படும் செக்கு ஒன்றை தனி மனிதராக இழுக்க வேண்டும் என்று கொடுமை படுத்தப்பட்டார்.

சிறை மீண்ட வ.உ.சி தமிழ் இலக்கிய உலகத்திற்கு தன்னை அர்ப்பணித்தார். நீதிக்கட்சியின் சமூகநீதி கொள்கையை ஆதரித்த வ.உ.சி அவர்கள் தந்தை பெரியாரின் லட்சிய தோழராகவும் விளங்கினார். வீரத்தமிழர் வ.உ.சி. புகழ் கொடி விண்முட்ட என்றும் பறக்கும். தியாகத் தழும்புகளை பெற்ற வ.உ.சி போன்ற தலைவர்கள் போராடி பெற்ற விடுதலையை பாசிச சக்திகள் சிதைப்பதை அனுமதிக்க கூடாது. வ.உ.சி யின் 151 ஆவது பிறந்த நாளில் அதற்கான உறுதியை எடுப்போம்.'' இவ்வாறு வைகோ தெரிவித்துள்ளார்.

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

 
x