Last Updated : 04 Sep, 2022 05:05 PM

 

Published : 04 Sep 2022 05:05 PM
Last Updated : 04 Sep 2022 05:05 PM

புதுச்சேரி | தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் முதல்வர் ரங்கசாமி பங்கேற்காதது ஏன்? - அதிமுக கேள்வி

புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி | கோப்புப் படம்.

புதுச்சேரி: “மத்திய உள்துறை அமைச்சர் தலைமையில் நடைபெற்ற தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் ஆளுநர் கலந்து கொண்டநிலையில், முதல்வர் கலந்துகொள்ளாதது ஏன்? இதுதொடர்பாக மக்களிடம் ஏற்பட்டுள்ள சந்தேகங்களை தீர்க்க ஆளுநர், முதல்வர் வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்” என்று அதிமுக கோரியுள்ளது.

இது குறித்து புதுச்சேரி அதிமுக கிழக்கு மாநில செயலாளர் அன்பழகன் இன்று செய்தியாளர்களிடம் கூறியது: ''பல்வேறு மாநிலங்களை கொண்ட இந்திய நாட்டில் மாநிலங்களுக்கிடையே இருக்க கூடிய பல்வேறு பிரச்சனைகளை மனம்விட்டு இணைந்து பேசி தீர்த்துக்கொள்ளும் விதத்தில் மத்திய உள்துறை அமைச்சரின் தலைமையில் ஆண்டுதோறும் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம்.

சம்பந்தப்பட்ட மாநிலத்தின் முதல்வர்கள் அந்த கூட்டத்தின் உறுப்பினர்கள் ஆவார்கள். அந்த அடிப்படையில் திருவனந்தபுரத்தில் தென் மாநிலங்களுக்கான கூட்டம் நடைபெற்றது. இதில் தமிழகம், கேரளம், கர்நாடகம், ஆந்திரா, தெலங்கான என அந்தந்த மாநில முதல்வர்கள் கலந்துகொண்டனர். புதுச்சேரி முதல்வர் உறுப்பினராக இருந்தும் அவர் கலந்துகொள்ளவில்லை. ஆனால் ஆளுநர் தமிழிசை கலந்துகொண்டார். இது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது.

யூனியன் பிரதேசமான ஆளுநருக்கு அதிகாரங்கள் குவிக்கப்பட்டிருந்தாலும் சந்தர்ப்ப சூழ்நிலைக்கு ஏற்ப அரசுக்கும் முதல்வருக்கும் உரிய முன்னுரிமை அளிக்க வேண்டியது ஆளுநரின் தலையாய கடமையாகும். இதுபோன்ற கூட்டங்களில் மாநில அந்தஸ்து இல்லாத சட்டப்பேரவை உள்ள புதுச்சேரி யூனியன் பிரதேசம் மற்றும் சட்டப்பேரவை இல்லாத அந்தமான், லட்சத்தீவுகளின் சார்பில் ஆளுநர், முதல்வர் கலந்துகொள்ளலாம் என அனுமதிக்கப்பட்டுள்ளது.

முதல்வர், ஆளுநர் கலந்துகொள்ளலாம் என விதி இருந்தும், சட்டப்பேரவை உள்ள யூனியன் பிரதேசத்தில் முதல்வர் கலந்து கொள்ளும் விதத்தில் ஆளுநர் உரிய வாய்ப்பினை அளித்திருக்க வேண்டும். மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வருக்கு உரிய உரிமையை நிலைநாட்டும் விதத்தில் இக்கூட்டத்துக்கு ஆளுநர் செல்வதை தவிர்த்து முதல்வரை கலந்துகொள்ள தெரிவித்திருக்கலாம். ஏன் முதல்வர் கலந்து கொள்ளவில்லை என தெரியவில்லை.

தமிழகத்தில் இருந்து புதுச்சேரிக்கு காவிரி தண்ணீர், விமான நிலையம் நிலம் கையகப்படுத்துவது உள்ளிட்டவை குறித்தும், புதுச்சேரி மாநில நலன் சம்பந்தமான பல பிரச்சனைகள் குறித்தும் ஆளுநர் தமிழிசை பேசியுள்ளார். இதில் முதல்வர் கலந்துகொண்டிருந்தால் அவர் அண்டை மாநில முதல்வரிடம் நேரடியாகவும் கலந்து பேசியிருக்க வாய்ப்பு இருந்திருக்கும். சிறப்புமிக்க இதுபோன்ற கூட்டங்களில் துணைநிலை ஆளுநர் கலந்துகொண்டது மற்றும் முதல்வர் கலந்துகொள்ளாதது ஏன் என்பது குறித்து மக்களுக்கு ஏற்பட்டிருக்கும் சந்தேகங்களை தீர்க்கும் வகையில் ஆளுநரும், முதல்வரும் இணைந்து ஒரு வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்'' என்று அன்பழகன் தெரிவித்தார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x