Published : 25 Oct 2016 12:55 PM
Last Updated : 25 Oct 2016 12:55 PM

ஸ்பெஷாலிட்டி மருத்துவமனைக்காக மைதானம் தாரை வார்ப்பு: 50 சதவீதமே எஞ்சியதால் மதுரை மருத்துவக் கல்லூரி மாணவர்கள் அதிருப்தி

மதுரை அரசு மருத்துவக் கல்லூரி, 1954-ம் ஆண்டு தொடங்கப்பட்டது. எம்பிபிஎஸ், எம்டி, எம்எஸ், டிஎம், எம்சிஎச் பட்ட மேற்படிப்பு படிப்புகள், டிப்ளமோ, இளநிலை, முதுநிலை நர்சிங், லேப் டெக்னீசியன் மற்றும் டிப்ளமோ, இளநிலை, முதுநிலை நர்சிங் படிப்புகள் உள்ளன.

இந்த படிப்புகளில், 2,500-க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். இவர்கள் விளையாட, உடற்பயிற்சி செய்ய கல்லூரி வளாகத்தையொட்டி, பனகல் சாலை யில் ஏழரை ஏக்கரில் விளையாட்டு மைதானம் இருந்தது.

நகரில் ரேஸ்கோர்ஸ் மைதானத்துக்கு அடுத்து மருத்துவக் கல்லூரி மைதானம்தான் பெரிய மைதானமாக இருந்தது. கடந்த 4 ஆண்டுகளுக்கு முன், அரசு மருத்துவமனை சூப் பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவக் கட்டி டம் கட்ட மருத்துவக் கல்லூரி மைதானத்தை தேர்வு செய்தனர். அதையடுத்து மைதானத்தின் ஒரு பகுதியில், சூப்பர் ஸ்பெஷாலிட்டி மருத்துவமனை கட்டும் பணி தொடங் கியது. கட்டிடக் கழிவுகள், எஞ்சியிருந்த மைதானத்தில் கொட்டப்பட்டன. மண், ஜல்லி, கற்களும், மைதானத்தில் கொட்டப்பட்டதால் மாணவர்களால் விளையாட முடியவில்லை.

கிரிக்கெட், ஹாக்கி, கால்பந்து உள்ளிட்ட குழு விளையாட்டுகள், தனிநபர்கள் விளையாட்டுகளில் கலந்து கொள்ளும் மருத்துவ மாணவர்கள், பயிற்சி எடுக்க தனியார் இடங்களை நாடிச் செல்ல வேண்டி இருந்தது.

மாவட்டத்தில் பல பள்ளி மைதானங்கள், பொது விளையாட்டு மைதானங்கள் கட்டிடங்களாக மாற்றப்பட்டுள்ளன. அந்த வரிசையில் மருத்துவக் கல்லூரி மைதானமும் பாழாகி விடுமோ என மாணவர்கள் அச்சமடைந்தனர்.

இந்நிலையில் மதுரை மருத்துவக் கல்லூரியில் கூடுதலாக 100 எம்பிபிஎஸ் சீட்டுகள் வழங்க, இந்திய மருத்துவ கவுன்சில் விரைவில் ஆய்வுக்கு வரவுள்ளதாக கூறப்படுகிறது. அப்போது மைதானம் இல்லாவிட்டால் மருத்துவக் கல்லூரிக்கு கிடைக்க வேண்டிய 100 சீட்டுகளும் கைநழுவும் அபாயம் உள்ளதாக கூறப்படுகிறது.

அதனால், அவசரம், அவசரமாக சூப்பர் ஸ்பெஷாலிட்டி கட்டிடம் போக, எஞ்சிய மைதானத்தை சீரமைக்கும் பணியில் மருத்துவமனை நிர்வாகம் ஈடுபட்டுள்ளது. ஆனால், பாதி மைதானமே உள்ளதால் முன்பு போல எல்லா விளையாட்டுகளும் விளையாட முடியாமல் மருத்துவக் கல்லூரி மாணவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.

இதுகுறித்து டீன் எம்.ஆர்.வைரமுத்துராஜுவிடம் கேட்ட போது, பயன்பாட்டில் இருந்த மைதானம் முழுவதும், அப்படியே சீரமைக்கப்பட்டு, மாணவர்கள் விளையாடுவதற்காக தயார்ப்படுத் தப்படுகிறது. நவ. 4 முதல் 8-ம் தேதி மருத்துவக் கல்லூரிகளுக்கு இடை யேயான விளையாட்டுப் போட்டிகள் நடக்கிறது என்றார்.

உடற்கல்வி இயக்குநர் இல்லை

சென்னைக்கு அடுத்து தமிழகத்தில் மிகப்பெரிய கல்லூரியாக மதுரை அரசு மருத்துவக் கல்லூரி உள்ளது. இக்கல்லூரியில் உடற்கல்வி பயிற்சி இயக்குநர் இல்லை. உடற்கல்வி இயக்குநர் ஓய்வு பெற்ற பிறகு அப்பணியிடம் நிரப்பப்படாததால், தற்போது நடக்கவுள்ள மருத்துவக் கல்லூரி விளையாட்டுப் போட்டிகளுக்கு ஓய்வுபெற்ற உடற்கல்வி இயக்குநரே பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார். உடல் ஆரோக்கியத்துக்கு விளையாட்டும், உடற்பயிற்சியும் எந்தளவுக்கு முக்கியம் என்பதை எல்லோரையும் விட நன்றாக தெரிந்த மருத்துவத் துறையில் விளையாட்டுக்கு கொடுக்கும் முக்கியத்துவம் இந்தளவுக்குதான் இருக்கிறது.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x