Published : 04 Sep 2022 09:34 AM
Last Updated : 04 Sep 2022 09:34 AM

சென்னையில் விநாயகர் சிலை ஊர்வலம்: 15,000 போலீஸார் பாதுகாப்பு

சென்னை நகரில் வைக்கப்பட்டுள்ள விநாயகர் சிலைகள் ஊர்வலமாக பட்டினப்பாக்கம் கடற்கரைக்கு எடுத்துச் செல்லப்படும் வழியில் போக்குவரத்து நெரிசல் ஏற்படாமல் இருக்கவும், வாகனங்களுக்குவழிகாட்டு நெறிமுறைகளை வழங்குவது குறித்தும் போலீஸாருடனான ஆலோசனை கூட்டம் அடையாறு போக்குவரத்து துணை காவல் ஆணையர் சக்திவேல் தலைமையில் நேற்று நடந்தது. படம்: பு.க.பிரவீன்

விநாயகர் சிலை ஊர்வலம் இன்றுநடைபெறுவதை ஒட்டி சென்னையில் 15 ஆயிரம் போலீ ஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

நாடு முழுவதும் விநாயகர் சதுர்த்தி விழா ஆக.31-ம் தேதி கொண்டாடப்பட்டது. தமிழகம் முழுவதும் பல்வேறு அமைப்புகள் சார்பில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டன.

இந்நிலையில் சிறிய அளவிலான விநாயகர் சிலைகள் நீர்நிலைகளில் தொடர்ந்து கரைக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், சென்னையில் விநாயகர் சதுர்த்திக்கு 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டதில், 1,352 சிலைகள் பிரம்மாண்ட சிலைகளாகும்.

அதே போன்று ஆவடி போலீஸ் சரகத்தில் 503 சிலைகளும், தாம்பரம் போலீஸ் சரகத்தில் 699 சிலைகளும் விதவிதமான வடிவங்களில் வைக்கப்பட்டன. இந்த நிலையில் பெரிய விநாயகர் சிலைகளைஊர்வலமாக எடுத்துச் சென்று நீர்நிலைகளில் கரைப்பதற்கான ஊர்வலம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) நடக்கிறது.

இதற்காக சென்னை பட்டினப்பாக்கம் சீனிவாசபுரம், நீலாங்கரை பல்கலைநகர், காசிமேடு மீன்பிடி துறைமுகம், திருவொற்றியூர் பாப்புலர் எடைமேடை பின்புறம் ஆகிய 4 கடற்கரை பகுதிகளில் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

பட்டினம்பாக்கத்தில் விநாயகர் சிலைகளை தள்ளிச் சென்று கடலில் கரைக்கும் வகையில் ‘டிரோலி’ பாதை அமைக்கப்பட்டுள்ளது. பிரம்மாண்ட விநாயகர் சிலைகளை தூக்கிச் சென்று கரைப்பதற்காக ராட்சத கிரேன் ஒன்றும் கொண்டு வரப்பட்டுள்ளது. காசிமேடு, திருவொற்றியூர், நீலாங்கரை கடற்கரைபகுதிகளில், படகில் எடுத்துச் சென்று சிலைகளை கரைப்பதற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

ஒவ்வொரு விநாயகர் சிலையும் போலீஸ் பாதுகாப்புடன் ஊர்வலமாக எடுத்து வரப்பட உள்ளது. சென்னை காவல் ஆணையர் சங்கர் ஜிவால் உத்தரவின்பேரில் 15 ஆயிரம் போலீஸாரும், 2ஆயிரம் ஊர் காவல்படை வீரர்களும் விநாயகர் சிலை ஊர்வல பாதுகாப்பு பணியில் ஈடுபட உள்ளனர்.

மேலும், அவசர உதவிக்கு தீயணைப்பு வாகனங்கள், ஆம்புலன்ஸ் வாகனங்கள், மோட்டார் படகுகள், நீச்சல் தெரிந்த தன்னார்வலர்கள் தயார் நிலையில் வைக்கப்பட உள்ளனர்.

அதேபோல், குதிரைப்படை, மணற்பரப்பில் செல்லும் வாகனம் மூலமாகவும் போலீஸார் கடற்கரையில் ரோந்துப் பணியில் ஈடுபட உள்ளனர். விநாயகர் சதுர்த்தி ஊர்வலம் மதியம் 12மணிக்கு தொடங்கி இரவு வரைநடைபெற உள்ளது. எனவே, கட்டுப்பாடுகளை மீறுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x