Published : 04 Sep 2022 04:25 AM
Last Updated : 04 Sep 2022 04:25 AM

‘அடுத்த 10 ஆண்டுகளில் இந்தியா மக்கள் தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் பேர் இருப்பர்’

கோவை கங்கா மருத்துவமனையில் நேற்று நடைபெற்ற தேசிய வாரியம் அங்கீகரித்த கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (ஏஎன்பிஏஐ) கருத்தரங்கில் கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரிரங்கன், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக் கழகத்தின் துணை வேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன் உள்ளிட்டோர். படம்: ஜெ.மனோகரன்

கோவை: தேசிய வாரியம் அங்கீகரித்த கல்வி நிறுவனங்கள் சங்கத்தின் (ஏஎன்பிஏஐ) கருத்தரங்கு கோவை கங்கா மருத்துவமனையில் நேற்று நடைபெற்றது. இதில், தமிழ்நாடு டாக்டர் எம்ஜிஆர் மருத்துவ பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் டாக்டர் சுதா சேஷைய்யன் பேசியதாவது:

அடுத்த பத்தாண்டுகளில் இந்தியாவின் மக்கள்தொகையில் 35 வயதுக்கு கீழ் உள்ளவர்கள் அதிகம் பேர் இருப்பார்கள். ஆனால், அவர்களில் பலர் நோய்களுடன் இருப்பார்கள் என்பது வேதனையான விஷயம். வாழ்க்கை முறை மாற்றமே இதற்கு காரணமாக இருக்கும். உலகில் உள்ள பதின்பருவத்தினரில் 20 சதவீதம் பேர் மனம் தொடர்பான பிரச்சினைகளால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அவர்கள் 13 வயதாக இருக்கும்போதே பிரச்சினை தொடங்கிவிடுவதாக பல மனநல மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். பெற்றோர்கள், ஆசிரியர்கள், சக மாணவர்கள் மூலம் ஏற்படும் அழுத்தத்தை எவ்வாறு கையாள வேண்டும் என்பதை பள்ளி அளவிலேயே மாணவர்களுக்கு கற்றுத்தர வேண்டும். குறிப்பாக மருத்துவம் பயிலும் மாணவர்கள் மனநலனுடன் இருப்பது அவசியம். இவ்வாறு அவர் கூறினார்.

சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட இஸ்ரோ முன்னாள் தலைவர் கே.கஸ்தூரி ரங்கன் பேசும்போது, "புதிய கல்விக் கொள்கையின்படி மருத்துவ பட்டம் பெறும் அனைவரும் மருத்துவம், அறுவைசிகிச்சை, அவசர சிகிச்சை அளிக்கும் திறன்களை பெற்றிருக்க வேண்டும்” என்றார்.

இந்த நிகழ்வில், தேசிய மருத்துவ அறிவியல் தேர்வுகள் வாரியத்தின் (என்பிஇஎம்எஸ்) தலைவர் அபிஜத் சேத், செயல் இயக்குநர் மினு பாஜ்பாய், தேசிய மருந்தியல் கல்வி, ஆராய்ச்சி நிறுவனத்தின் தலைவர் பபதோஷ் பிஸ்வாஸ், கங்கா மருத்துவமனையின் இயக்குநர் டாக்டர் எஸ்.ராஜசேகரன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

FOLLOW US

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x