

கிருஷ்ணகிரி அணையில் இருந்து விநாடிக்கு 7,426 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
தென்பெண்ணை நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்யும் மழையைப் பொறுத்து, கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து ஏற்ற, இறக்கத்தில் இருந்து வருகிறது. அணைக்கு நேற்று முன்தினம் விநாடிக்கு 6,089 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று 7,062 கனஅடியாக அதிகரித்தது. அணையில் இருந்து விநாடிக்கு 7,426 கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.
அணையின் மொத்த கொள்ளளவான 52 அடியில் நீர்மட்டம் 49.85 அடியாக உள்ளது. மேலும், அணைக்குள் சுற்றுலாப் பயணிகளுக்கு விதிக்கப்பட்ட தடை மற்றும் ஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்களுக்கு விடுக்கப்பட்ட வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.
பாம்பாறு, சின்னாறு அணைகள்: ஊத்தங்கரை பாம்பாறு அணையின் மொத்த கொள்ளள வான 19.80 அடியில் நீர்மட்டம் 5.28 அடியாக உள்ளது. அணைக்கு நீர்வரத்து விநாடிக்கு 868 கனஅடியாக உள்ளது.அணையில் இருந்து 915 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது. இதேபோல, சூளகிரி அருகேயுள்ள சின்னாறு அணை நிரம்பியுள்ள நிலையில், அணையில் இருந்து விநாடிக்கு 284 கனஅடி நீர் வெளியேற்றப்படுகிறது.
கெலவரப்பள்ளி அணை: ஓசூர் கெலவரப்பள்ளி அணைக்கு நேற்று விநாடிக்கு 2,020 கனஅடி நீர்வரத்து இருந்தது.
அணையில் இருந்து அதே அளவு நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது: அணையின் மொத்த கொள்ளளவான 44.28 அடியில் நீர்மட்டம் 40.02 அடியாக உள்ளது. ஆற்றில் தொடர்ந்து வெள்ளப் பெருக்கு உள்ளதால், கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை நீட்டிக்கப்பட்டுள்ளது.