தமிழகத்தில் கடந்த ஓராண்டில் ரூ.181.27 கோடி செலவில் 1.78 லட்சம் பேருக்கு புற்றுநோய் சிகிச்சை: மா.சுப்பிரமணியன் தகவல்

அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
அமைச்சர் மா.சுப்பிரமணியன் | கோப்புப் படம்
Updated on
2 min read

கடந்த ஓராண்டில் ரூ.181.27 கோடிசெலவில் 1.78 லட்சம் பேருக்குபுற்றுநோய் சிகிச்சை அளிக்கப்பட்டுஉள்ளது என்று சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்தார்.

இந்திய விமான நிலைய ஆணையத்தால் ரூ.18.5 கோடி டிசிஎஸ்ஆர் நிதியின் கீழ் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனைக்கு வழங்கப்பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் புற்றுநோய்க்கான பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளில் 1,78,168 பயனாளிகளுக்கு ரூ.181.27கோடி முதல்வரின் காப்பீட்டுத் தொகையின் கீழ் செலவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2012முதல் இதுவரை 9,58,921 பயனாளிகளுக்கு புற்றுநோய்க்கான பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டு ரூ.941.11 கோடி காப்பீட்டுத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது.

சென்னை அண்ணா சாலையில் உள்ள அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில் நவீனகதிர் வீச்சு கருவி மையத்தை பொதுமக்களின் பயன்பாட்டுக்கு சுகாதாரத் துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் நேற்று கொண்டு வந்தார்.

சுகாதாரத் துறைச் செயலாளர் பா.செந்தில்குமார், தமிழ்நாடு மருத்துவ சேவைகள் கழகத்தின் இயக்குநர் தீபக் ஜேக்கப், சென்னை விமான நிலைய இயக்குநர் சரத்குமார், மருத்துவக் கல்வி இயக்குநர் நாராயண பாபு, மருத்துவமனையின் இயக்குநர் விமலா, கதிர்வீச்சுத் துறைத் தலைவர் பாலசுப்பிரமணியன் ஆகியோர் உடன் இருந்தனர்.

அப்போது, அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

முந்தைய ஆட்சியில் இருந்ததைவிட தற்போது கூடுதல் வசதிகளுடன், மிகவும் சிறப்பாக இம்மருத்துவமனை செயல்படுகிறது. இந்த மருத்துவமனையில் இதுவரை 10 இதய உறுப்பு மாற்றுஅறுவை சிகிச்சைகள் நடந்துள்ளன. இந்த ஆண்டு மட்டும் 2 இதயஉறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

முதல்வரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் பயன்பெறும் பயனாளிகள் எண்ணிக்கை ராஜீவ் காந்தி அரசு பொது மருத்துவமனைக்கு அடுத்து இந்த மருத்துவமனையில் தான் அதிகமாக உள்ளது. இந்த மருத்துவமனையில் உள்ள கதிர்வீச்சுப் புற்றுநோயியல் துறை மிகவும் சிறப்பு வாய்ந்தது.ஒவ்வொரு ஆண்டும் 3,000 புற்றுநோயாளிகள் இம்மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர்.

புற்றுநோய் சிகிச்சை முக்கியமாக கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய் சிகிச்சைக்காக பிரேக்கி தெரபி இயந்திரம் ரூ.2 கோடி செலவில் ஜெர்மனியிலிருந்து வாங்கப்பட்டு இன்று இங்கே மக்கள்பயன்பாட்டுக்கு அர்ப்பணிக்கப்படுகிறது. இந்த சிகிச்சையில் கட்டியின் அருகில் உள்ள உறுப்புகளுக்கு பாதிப்பு ஏற்படாமல், புற்று நோயால் பாதிக்கப்பட்ட திசுக்கள் மட்டும் முற்றிலுமாக அழிக்கப்படும். இந்த சிகிச்சை 10 நிமிடங்களில் முடிந்துவிடும்.

அறுவை சிகிச்சை சாத்தியமில்லாத கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோயின் முற்றிய நிலைகளுக்கு இந்த சிகிச்சை மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இந்த இயந்திரத்தில் பயன்படுத்தப்படும் கதிரியக்க பொருள் கோபால்ட் ஆகும். மற்ற கதிரியக்க பொருளைமூன்று மாதத்துக்கு ஒருமுறை மாற்ற வேண்டும்.

இதில், கதிரியக்க பொருளை மாற்றுவது 7-8 ஆண்டுகளுக்குப் பிறகுதான் தேவைப்படும் என்பதால் செலவும் குறையும். இந்த சிகிச்சை முறையில் நோயாளி 3 முறை சிகிச்சை பெறவேண்டும். இதற்கு அரசுக்கு ஆகும் செலவு ரூ.24,000. இத்தொகைமுதல்வரின் மருத்துவக் காப்பீட்டு திட்டத்தின் கீழ் வழங்கப்படுகிறது.

இந்திய விமான நிலைய ஆணையத்தால் ரூ.18.5 கோடி டிசிஎஸ்ஆர் நிதியின் கீழ் பல்வேறு மருத்துவ உபகரணங்கள் மருத்துவமனைக்கு வழங்கப் பட்டுள்ளன. இந்த அரசு பொறுப்பேற்றவுடன் புற்றுநோய்க்கான பல்வேறு அறுவை சிகிச்சை முறைகளில் 1,78,168 பயனாளிகளுக்கு ரூ. 181.27 கோடி முதல்வரின் காப்பீட்டுத் தொகையின் கீழ் செலவு செய்யப்பட்டுள்ளது.

தமிழகத்தில் 2012 முதல் இதுவரை 9,58,921 பயனாளிகளுக்கு புற்றுநோய்க்கான பல்வேறு சிகிச்சைகள் செய்யப்பட்டு ரூ.941.11 கோடி காப்பீட்டுத் தொகை செலவு செய்யப்பட்டுள்ளது என்றார்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in