

முதியோர் உதவித் தொகையை பயனாளிகளுக்கு வழங்க வங்கியின் ஒப்பந்த பணியாளர்கள் கமிஷன் கேட்பதாக முதியோர் புகார் தெரிவித்துள்ளனர். இது குறித்து வங்கி நிர்வாகத்திடம் புகார் தெரிவித்தால் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என மண்டல வங்கி மேலாளர் தெரிவித்துள்ளார்.
தமிழக அரசு மூலம் முதி யோருக்கு ஆயிரம் ரூபாய் உதவித்தொகை வழங்கப்படுகி றது. இதில், பல்வேறு முறை கேடுகள் நடப்பதாக புகார் எழுந்ததை தொடர்ந்து, பயனாளி களின் வங்கிக் கணக்கு மூலம் உதவித்தொகை வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது. இதை யடுத்து, பயனாளிகள் வங்கிக் கணக்கு தொடங்கி அதன் விவரங்களை வட்டாட்சியர் அலு வலகங்களில் அளித்தனர். இதன் பிறகு, வங்கிக் கணக்கு மூலம் உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.
எனினும், முதியோர் உதவித் தொகை பெற வங்கிகளில் கூட்டம் அதிகம் காணப்பட்டதால் அவர்களுக்கு ஏடிஎம் கார்டு வழங்கப்பட்டது. ஆனால், ஏடிஎம் அட்டையைப் பயன்படுத்தி பணம் எடுப்பதில் சிரமம் உள்ளதாக முதியோர் தெரிவித்தனர். இதனால், கிராமப் பகுதிகளில் உள்ள பயனாளிகளுக்கு வீடு வீடாக சென்று உதவித் தொகை வழங்கவும், நகரப்பகுதிகளில் ஏதேனும் ஓர் இடத்தில் அமர்ந்து உதவித்தொகையை வழங்கவும் ஒப்பந்த அடிப்படையில் பணி யாளர்களை வங்கி நிர்வாகங்கள் நியமித்துள்ளன.
ரூ. 50 கேட்பதாக புகார்
இவர்கள், முதியோர் உதவித் தொகை வழங்க, வங்கி சர் வருடன் இணைந்த பயோ மெட்ரிக் இயந்திரத்தில் பயனாளி யின் கைரேகையைப் பதிவு செய்து அவர்களுக்கான உதவித் தொகை வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளதா என அறிகின்றனர். அதன்பின், வங்கி ஆவணங்களில் பதிவு செய்து பயனாளிகளுக்கு உதவித் தொகையை வழங்குகின்றனர்.
இந்நிலையில், உதவித் தொகை வழங்கும் பணியில் ஈடு பட்ட ஒப்பந்த பணியாளர்கள் ரூ.50 லஞ்சமாக கேட்பதாக முதியோர் குற்றம்சாட்டியுள்ளனர். ஏடிஎம் கார்டு பயன்படுத்தி உதவித் தொகை பெறுவோரிடமும், தாங் களே உதவித்தொகை வழங்கு வதாக கூறி ஏடிஎம் அட்டையை பெற்றுக்கொள்வதாக புகார் கூறியுள்ளனர்.
இதுகுறித்து, தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்ட செயலாளர் நேரு கூறியதாவது: உதவித்தொகை பெறுவதிலும், வழங்குவதிலும் முறைகேடு நடைபெறுவதால் வங்கிக் கணக்கு மூலம் உதவித் தொகை வழங்கப்படுகிறது. ஆனால், வங்கிக் கணக்கில் வழங்காமல் ஒப்பந்த பணியாளர்கள் மூலம் உதவித்தொகை வழங்கப்படு கிறது.
அலைக்கழிப்பு
இதைப் பயன்படுத்தி, ஒப்பந்த பணியாளர்கள் ரூ.50 வரை லஞ்சம் கேட்டுப் பெறுகின்றனர். மறுக்கும் நபர்களுக்கு பல்வேறு காரணங்கள் கூறி உதவித் தொகை வழங்குவதைத் தாமதப்படுத்துகின்றனர். இதனால், முதியோர் செய்வதறியாமல் தவிக்கின்றனர் என்று அவர் கூறினார்.
இதுகுறித்து, இந்தியன் வங்கி மண்டல மேலாளர் கூறியதாவது: உதவித் தொகை வழங்கும் ஒப்பந்த நிறுவனத்துக்கு, ஒரு பயனாளிக்கு ரூ.13.5 வீதம், பணம் தரப்படுகிறது. உதவித் தொகை வழங்க லஞ்சம் கேட்பது தொடர்பாக பயனாளிகள் வங்கி நிர்வாகத்திடம் நேரடியாக புகார் தெரிவித்தால் உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்று அவர் கூறினார்.