

தமிழகத்தில் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் உள்ளிட்ட 13 கோயில்களில் அத்தியாவசிய சீரமைப்புப் பணிகளை மேற்கொள்ள தமிழக அரசு நிபுணர் குழுவை அமைக்க உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள புராதன சின்னங்கள், பழமையான கோயில்களை பராமரிக்க தமிழக அரசு தகுதியான நிபுணர்கள் குழுவை அமைக்கவில்லை எனக்கூறி சென்னை உயர் நீதிமன்றம் தானாக முன்வந்து வழக்குத் தொடர்ந்தது. அதேபோல, பழமையான கோயில்களை புனரமைப்பதாக கூறி ஆகம விதிகளை கடைபிடிக்காமல் இடித்து தள்ளுவதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ரங்கராஜன் நரசிம்மன் என்பவர் பொதுநல வழக்குத் தொடர்ந்தார்.
இந்த வழக்குகளை விசாரித்த தலைமை நீதிபதி அடங்கிய அமர்வு, கோயில்களில் சீரமைப்பு என்ற பெயரில் பணிகளை மேற்கொள்ள இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
இந்த உத்தரவை எதிர்த்து ஸ்ரீரங்கம் ரெங்கநாதர், சமயபுரம் மாரியம்மன், திருநெல்வேலி நெல்லையப்பர் உள்ளிட்ட 13 கோயில்களின் இணை ஆணையர்கள் சென்னை உயர் நீதிமன்றம் மற்றும் உச்ச நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தனர்.
இந்நிலையில், உயர் நீதிமன்றத்தில் இந்த வழக்கு விசாரணை நேற்று தலைமை நீதிபதி அடங்கிய முதல் அமர்வில் நடந்தது. அப்போது நீதிபதிகள் கூறியதாவது:
நாங்கள் ஏற்கெனவே இந்த கோயில்களில் அத்தியாவசிய பணிகளை மட்டும் பார்த்துக் கொள்ளலாம் என இடைக்காலமாக தடையை நீக்கி உத்தரவு பிறப்பித்துள்ளோம். ஆனால் அதற்காக எல்லா பணிகளையும் அத்தியாவசிய பணிகள் எனக்கூறி பழுது பார்ப்பதாகவும், ஆகம விதிகள் மற்றும் கலைநயங்களை சிதைக்கும் வகையில் புனரமைப்புப் பணிகளை மேற்கொண்டு வருவதாகவும் மீண்டும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. அதன் காரணமாகத்தான் இந்த வழக்கே தொடரப்பட்டது.
எனவே, தற்போது இந்த கோயில்களில் அவசரம் கருதி எந்த அத்தியாவசிய பணிகளை மேற்கொள்வதாக இருந்தாலும் நிபுணர் குழுவை அமைத்து அதன் கருத்தை கேட்டு அறிந்த பிறகுதான் மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக தமிழக அரசு உடனடியாக நிபுணர் குழுவை அமைக்க வேண்டும். இந்தக் குழுவிடம் ஒவ்வொரு கோயில் நிர்வாகமும் தங்களது வளாகத்தில் மேற்கொள்ள வேண்டிய அத்தியாவசிய புனரமைப்பு, பழுது தொடர்பான பணிகள் குறித்து முறையிட்டு தீர்வு காணலாம். இந்த வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு உதவுவதற்காக நியமிக்கப்பட்ட வழக்கறிஞரும் மேற்கண்ட பணியின்போது ஆகம விதிகள் மீறப்படுகிறதா? கலைநயங்கள், புராதனங்கள் சிதைக்கப்படுகிறதா? என்பது குறித்து கண்காணித்து அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்.
இவ்வாறு உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை வரும் நவம்பர் 4-ம் தேதிக்கு தள்ளி வைத்தனர்.