Published : 04 Sep 2022 04:45 AM
Last Updated : 04 Sep 2022 04:45 AM
கன்னியாகுமரி மாவட்டத்தில் மீண்டும் தொடர் மழை பெய்து வருவதால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. இதனால் குழித்துறை தாமிரபரணி ஆற்றங்கரையோரப் பகுதி மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் கடந்த 15 நாட்களுக்கு மேலாக பருவமழை குறைந்திருந்தது. கடும் வெயில் அடித்து வந்த நிலையில், கடந்த 4 நாட்களாக மீண்டும் மழை பெய்து வருகிறது. தொடர்ச்சியாக பெய்து வரும் மழையால் மாவட்டம்முழுவதும் குளிரான தட்பவெப்பம் நிலவுகிறது. நேற்று அதிகாலையில் இருந்து விட்டுவிட்டு சாரல் மழை பொழிந்தது.
அதிகபட்சமாக பேச்சிப்பாறையில் 20 மிமீ மழை பெய்துள்ளது. சிவலோகத்தில் 19 மிமீ, பாலமோரில் 16, சிற்றாறு ஒன்றில் 15, முள்ளங்கினாவிளையில் 12, மாம்பழத்துறையாறில் 10 மிமீ மழை பதிவானது.
மழையால் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. பேச்சிப்பாறை அணைக்கு விநாடிக்கு 1,129 கனஅடி தண்ணீர் வரத்தாகிறது. 48 அடி கொண்ட அணையின் நீர்மட்டம் 43.63 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 575 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது. 77 அடி உயரம் கொண்ட பெருஞ்சாணி அணையின் நீர்மட்டம் நேற்று 70 அடியாக உயர்ந்தது.
அணைக்கு விநாடிக்கு 791 கனஅடி தண்ணீர் வருகிறது. அணையில் இருந்து 310 கனஅடி தண்ணீர் வெளியேறுகிறது.
சிற்றாறு ஒன்று அணையின் நீர்மட்டம் 12 அடியாகவும், சிற்றாறுஇரண்டின் நீர்மட்டம் 12.10 அடியாகவும் உயர்ந்தது. சிற்றாறு ஒன்றுஅணைக்கு 139 கனஅடி தண்ணீர்வரத்தாகும் நிலையில், அணையில் இருந்து 150 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
நாகர்கோவில் நகருக்கு குடிநீர் வழங்கும் 25 அடி உயரம் கொண்ட முக்கடல் அணையின் நீர்மட்டம் 13.30 அடியாக உயர்ந்தது. அணையில் இருந்து 8.6 கனஅடி தண்ணீர் வெளியேறி வருகிறது.
தொடர் மழையால் குளங்களும் நிரம்பி வருகின்றன. திற்பரப்பு அருவியில் தண்ணீர் ஆர்ப்பரித்துக் கொட்டுகிறது. பேச்சிப்பாறை, பெருஞ்சாணி, சிற்றாறு அணைகளில் இருந்து வெளியேறும் தண்ணீர் தாமிரபரணி ஆற்றில் கரைபுரண்டு ஓடுகிறது.
இதனால், குழித்துறை தாமிரபரணி ஆற்று கரையோர பகுதி மக்களுக்கு பொதுப்பணித்துறை நீர்ஆதாரத் துறையினர் வெள்ள அபாய எச்சரிக்கை விடுத்துள்ளனர். பாதுகாப்பான இடங்களுக்கு பொதுமக்கள் செல்லுமாறு அறி வுறுத்தப்பட்டுள்ளது.
இதுபோல், பெருஞ்சாணி அணைப்பகுதி மற்றும் கரையோரப் பகுதிகளை பொதுப்பணித்துறையினர் 24 மணி நேரமும் கண்காணித்து வருகின்றனர். தொடர்ந்து மழை பெய்து வருவதால் எந்நேரமும் அணைகளில் இருந்து அதிகமான தண்ணீர் திறந்து விடவாய்ப்புள்ளது.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT