Last Updated : 03 Sep, 2022 06:45 PM

 

Published : 03 Sep 2022 06:45 PM
Last Updated : 03 Sep 2022 06:45 PM

“தமிழ் தேசியம், இந்திய தேசியத்தைப் புரிந்துகொள்வது எப்படி?” - திருமாவளவன் விளக்கம்

விசிக தலைவர் திருமாவளவன்

புதுச்சேரி: தமிழ் தேசியத்தை எப்படி பார்க்க வேண்டும், இந்திய தேசியம் என்பதை எப்படி புரிந்துகொள்ள வேண்டும் என்று நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் தனது கருத்துகளால் விவரித்துள்ளார்.

தனித்தமிழ் இயக்கம் ஒரு நூற்றாண்டு வரலாறு புத்தகம் வெளியீட்டு விழா பாக்கமுடையான்பட்டு தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்றது. இதில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவரும், எம்பியுமான திருமாவளவன் புத்தகத்தை வெளியிட்டு பேசியது: ‘‘எது தமிழ், எது தமிழ் இல்லை என்பதைக் கூட அறியமுடியாத அளவுக்கு தமிழோடு எல்லாம் கலந்து கிடக்கின்றன. தமிழ் தேசிய அரசியலுக்கு மொழி உணர்வு, மொழி பற்று போதாது. மொழியை பாதுகாக்க வேண்டும் என்ற பொறுப்புணர்வு தேவை. அது கோட்பாட்டின் பின்னணியோடு தொடர்புடையதாக இருக்க வேண்டும். தமிழுக்கு என்று தனித்துவம், பாரம்பரியம், வரலாறு இருக்கிறது.

அதுபோல் தமிழ்மொழியை பேசக்கூடிய தமிழினத்துக்கு நீண்டநெடிய பாரம்பரியம் இருக்கிறது. தமிழ்மொழியின் தனித்தன்மை என்று சொன்னால் அது தமிழினத்தின் தனித்தன்மை. எனவே தமிழை காப்பாற்றுகிறோம் என்றால் தமிழினத்தை காப்பாற்றுகிறோம் என்று தான் பொருள். அப்படியென்றால் தமிழ் மொழியுடன், பிறமொழி கலக்கிறது என்றால் அது மொழி எதிர்ப்பல்ல, ஆதிக்கத்தின் எதிர்ப்பு. இந்தி, சமஸ்கிருதத்தை எதிர்க்கிறோம் என்றால், அது வெறும் இந்தி, சமஸ்கிருத மொழி எதிர்ப்பதல்ல. இந்தி, சமஸ்கிருதம் பேசுவோரின் ஆதிக்க எதிர்ப்பு.

ஆகையால், எல்லாம் கோட்பாட்டின் அடிப்படையில் இருந்தால் அது நின்று நிலைத்து வலுபெறும்.மொழி என்ற உணர்ச்சி மட்டுமே இருந்தால் அது நீர்த்துபோய்விடும். நமது மொழியை எப்படி, எந்த கோட்பாட்டின் பின்னணியில் பார்கின்றோம் என்ற புரிதல் இருந்தால், அது தலைமுறை தலைமுறையாக நிலைத்து நிற்கும். அடுத்த பரிணாமத்தை நோக்கி நகரும். தமிழை காப்பாற்றுகிறேன் என்றால், தமிழ் இனத்தை காப்பாற்றுகிறேன் என்பதாகும். எனவே கோட்பாட்டின் புரிதலோடு தமிழ் தேசியத்தை பார்க்க வேண்டும். இந்திய தேசியம் என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

காங்கிரஸ் பேசிய இந்திய தேசியம் வேறு, கம்யூனிஸ்ட் பார்க்கின்ற ஒட்டுமொத்த இந்தியா என்பது வேறு, அம்பேத்கர் ஒருங்கிணைந்த இந்தியா என்று பார்த்த பார்வை வேறு, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் பேசுகின்ற இந்திய தேசியம் வேறு. காந்தி காலத்தில் பேசப்பட்ட இந்திய தேசியம் ஆங்கிலேயர்களை விரட்டுவதற்காக நாம் அனைவரும் இந்தியன் என்ற நாட்டுப்பற்றின் அடிப்படையிலானது.

ஆனால் பாஜக, ஆர்எஸ்எஸ், சங்பரிவார் பேசுவது மதவெறியிலான இந்திய தேசியம். இந்துக்கள் தேசியம் என்று பேசுகிறார்கள். இந்தியர்கள் என்று சொல்லும்போது, வெள்ளையர்களுக்கு எதிரான வெறுப்பு அரசியல் தேவைப்பட்டது. இந்துக்கள் என்று சொல்லும்போது இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள் வெறுப்பு அரசியல் தேவைப்படுகிறது. ஆகவே அவர்கள் சிறுபான்மை இனத்துக்கு எதிரான வெறுப்பு அரசியலை விதைக்கிறார்கள்.

அம்பேத்கர் ஒன்றுபட்ட இந்தியா, வலிமையான இந்தியா தேவை என்றது, குறிப்பிட்ட சமுதாயம் ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல, இந்தி மொழி ஆதிக்கம் செலுத்த வேண்டும் என்பதற்காக அல்ல. அனைவருக்கும் இறையாண்மை, சமதர்ம, மதசார்பற்ற, ஜனநாயகத்தை கட்டமைக்கின்ற புதிய இந்தியா தேவையென்றார்.

சாதி ஒழிப்பு, சாதி, மதம் அடிப்படையில் ஆட்சி அமைந்தால் சாதி அடிப்படையில் பாதிக்கப்படுகின்றவர்கள் ஒருகாலமும் விடுதலை பெற முடியாது. பெண்கள் விடுதலை பெற முடியாது. பாஜக மதவெறி தேசியத்தை கட்டமைக்க விரும்புகிறபோது. அவர்கள் பிராந்தியத்தை ஏற்க மாட்டார்கள். மண்டல கருத்தியல் வாதத்தை ஏற்கமாட்டார்கள். மொழி அடிப்படையிலான தேசியத்தை ஏற்க மாட்டார்கள். மொழி உணர்வு மதவெறி தேசியத்துக்கு எதிர்ப்பு. எனவே ஆர்எஸ்எஸ், சங்பரிவார் அமைப்புகளால் மொழிவழி தேசியத்தை ஒருகாலமும் ஏற்க முடியாது. எனவே, சனாதான எதிர்ப்பு நீர்த்துபோனால் சாதி மறுபடியும் நிலை நிறுத்தப்படும். பெண்ணடிமை மறுபடியும் நிலை நிறுத்தப்படும். சனாதன அடிப்படையில் சமூகம் சிதறிப்போகும்’’என்றார்.

இந்த விழாவுக்கு புதுச்சேரி தனித்தமிழ் இயக்கம் தலைவர் தமிழமல்லன் தலைமை தாங்கினார். தமி்ழத்தென்றல் சத்தியசீலன் வரவேற்றார். எம்பி ரவிக்குமார் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x