

சென்னை: பள்ளிக்கல்வித் துறை சார்பில் வழங்கப்பட உள்ள டாக்டர் ராதாகிருஷ்ணன் விருதுக்கு 396 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
மறைந்த முன்னாள் குடியரசுத் தலைவர் ராதாகிருஷ்ணன் பிறந்தநாளான செப்டம்பர் 5-ம் தேதி ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது. இதையொட்டி, சிறந்த ஆசிரியர்களை தேர்வு செய்து ‘டாக்டர் ராதாகிருஷ்ணன் விருது’வழங்கி தமிழக அரசு கவுரவப்படுத்தி வருகிறது.
இந்த ஆண்டுக்கான விருதுக்கு தகுதியான ஆசிரியர்களை தேர்வுசெய்யும் பணி கடந்த ஒரு மாதமாகநடந்து வந்தது. இதில், மாவட்ட அளவிலான பரிந்துரை அடிப்படையில், விருதாளர்கள் பட்டியலை மாநில தேர்வுக் குழுவினர் இறுதி செய்துள்ளனர். அதன்படி அரசுப் பள்ளிகளில் 342 பேர், தனியார் பள்ளிகளில் 38 பேர், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகளில் 2 பேர், சமூக பாதுகாப்புத் துறை பள்ளிகளில் 2 பேர், மாற்றுத் திறன் ஆசிரியர்கள் 2 பேர், மாநில கல்வியியல் ஆராய்ச்சி, பயிற்சி நிறுவன (எஸ்சிஇஆர்டி) பேராசிரியர்கள் 10 பேர் என மொத்தம் 396 பேர் விருதுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பள்ளிக்கல்வித் துறை சார்பில் சென்னையில் வரும் 5-ம் தேதி நடைபெறவுள்ள ஆசிரியர் தின விழாவில் விருதுகள் வழங்கப்பட உள்ளன. ராதாகிருஷ்ணன் விருது ரூ.10,000 ரொக்கம், 36.5 கிராம் வெள்ளிப் பதக்கம், பாராட்டுச் சான்றிதழ் ஆகியவற்றை கொண்டதாகும்.