

தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றக் கூடாது என்று இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் முத்தரசன் கூறியுள்ளார்.
இது தொடர்பாக இன்று அவர் வெளியிட்ட அறிக்கையில், ''சென்னையில் செயல்பட்டு வரும் சிப்பெட் நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றுவதற்கான முயற்சிகளை மத்திய அரசு மேற்கொள்வதை கைவிட வேண்டும். சிப்பெட் நிறுவனம் மத்திய அரசின் ரசாயனம் மற்றும் பெட்ரோ ரசாயனம் மற்றும் உரங்கள் அமைச்சகத்தின் கட்டுப்பாட்டில் திறம்பட இயங்கிவரும் பொதுத்துறை நிறுவனமாகும்.
1968 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்நிறுவனம் மிகவும் லாபகரமாக இயங்கக்கூடிய பொதுத் துறை நிறுவனமாகும். பிளாஸ்டிக் துறையில் பல்வேறு சாதனைகளை ஏற்படுத்தியது மட்டுமின்றி, இது குறித்து கல்வியை போதிப்பதிலும் பல்வேறு உயர்தொழில் நிறுவனங்களுக்கு இணையாக விளங்கி, உலகத்தரம் வாய்ந்த பிளாஸ்டிக் கல்வி போதிக்கும் நிறுவனங்களுக்கும் மற்றும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ள தலைசிறந்த மையங்களுக்கும் முன்மாதிரி நிறுவனமாக சிப்பெட் விளங்கி வருகின்றது.
இந்நிறுவனம் கடந்த 9 ஆண்டுகளில் ரூ 250 கோடி லாபம் ஈட்டியுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த 2007ம் ஆண்டே இந்நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றிட முயன்றதை கடும் எதிர்ப்பின் காரணமாக மத்திய அரசு கைவிட்டது நினைவு கூறத்தக்கது.
தற்போதுள்ள மத்திய அரசு மீண்டும் டெல்லிக்கு மாற்றிட முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றது. தமிழகத்தில் திறம்பட செயல்பட்டு வரும் இந்நிறுவனத்தை டெல்லிக்கு மாற்றிட தேவையில்லை. மத்திய அரசு தனது முயற்சிகளை கைவிட வேண்டும். தமிழ்நாடு அரசு இப்பிரச்சனையில் தலையிட்டு தடுத்து நிறுத்திட வேண்டும்'' என்று முத்தரசன் கூறியுள்ளார்.