

பழநி: பழநியில் உள்ள பாலாறு பொருந்தலாறு அணை பூங்கா பராமரிப்பின்றி புதர் மண்டி காணப்படுகிறது.
பழநியில் மேற்குத் தொடர்ச்சி மலையடிவாரத்தில் சுற்றிலும் மரங்கள், வயல்வெளிகள் நிரம்பிய பசுமையான சூழலில் அமைந்துள்ளது பாலாறு பொருந்தலாறு அணை. இந்த அணையை ரசிக்கவும், அணை பகுதியில் உள்ள வீர ஆஞ்சநேயரை தரிசிக்கவும், விடுமுறைநாட்களில் உள்ளூர் மட்டுமின்றி வெளி யூர்களில் இருந்தும் ஏராளமானோர் வருகின்றனர். இங்கு குழந்தைகளை கவர் வதற்காக அமைக்கப்பட்டுள்ள பொழுது போக்குப் பூங்கா பல ஆண்டுகளாக போதிய பராமரிப்பின்றி உள்ளது.
இதன் காரணமாக, பூங்காவில் உள்ள நீரூற்று, சறுக்கு, அமரும் இருக்கை, ராட்டினம் உள்ளிட்ட விளையாட்டு உபகரணங்கள் பழுதடைந்தும், செடி, கொடிகள் வளர்ந்து புதர் மண்டியும் கிடக்கின்றன.
இதனால் விளையாட முடியாமல் குழந்தைகள் ஏமாற்றத்துடன் திரும்பிச் செல்கின்றனர். இது மட்டுமின்றி, போதிய கண்காணிப்பு இல்லாததால் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் மாறி வருகிறது.
இதைத் தடுத்து, பூங்காவை சீரமைக்க பொதுப் பணித்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிர்பார்க்கின்றனர்.