

சென்னை மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை பணிகளை மேற்கொள்ள அரசு முதன்மைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தலைமையில் 15 ஐஏஎஸ் அதிகாரிகளை நியமித்து அரசு உத்தரவிட்டுள்ளது.
இது தொடர்பாக சென்னை மாநகராட்சி வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:
இந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையை முன்னிட்டு சென்னை மாநகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களை ஒருங்கிணைத்து மீட்பு மற்றும் நிவாரண பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை முதன்மைச் செயலர் க.பணீந்திர ரெட்டியை அரசு நியமித்துள்ளது.
மேலும் அவரது ஒருங்கிணைப்பில், சென்னை மாநகராட்சியில் உள்ள 15 மண்டலங்களுக்கும் தலா ஒரு ஐஏஎஸ் அதிகாரி என 15 ஐஏஎஸ் அதிகாரிகளை கண்காணிப்பு மற்றும் மேற்பார்வை அலுவலர்களாக அரசு நியமித்துள்ளது.
இந்நிலையில் மாநகர பகுதியில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்த ஆய்வுக் கூட்டம் ரிப்பன் மாளிகையில் நேற்று நடைபெற்றது. இக்கூட்டம் அரசு முதன்மைச் செயலர் க.பணீந்திர ரெட்டி தலைமையில், ஆணையர் த.கார்த்திகேயன் முன் னிலையில் நடைபெற்றது. இக் கூட்டத்தில் வடகிழக்கு பருவமழையை முன்னிட்டு மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்தும், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்தும் ஆய்வு செய்யப்பட்டது.
மண்டல அலுவலகங்களில் கூட்டம்
அதனைத் தொடர்ந்து, ஒவ்வொரு மண்டலத்திலும் கண்காணிப்பு அலுவலர் தலைமையில் அனைத்துத் துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் நடத்தவும், கள ஆய்வு மேற்கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டது.
கண்காணிப்பு அலுவலர் தலைமையில் நாளை (அக்.21) மாலை 3 மணிக்கு, அந்தந்த மாநகராட்சி மண்டல அலுவலகங்களில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற உள்ளது. அதில் விருப்பம் உள்ள தொண்டு நிறுவனங்கள், குடியிருப்பு நலச் சங்கங்கள் பங்கேற்று, தங்கள் பகுதிகளுக்கு உட்பட்ட இடங்களில் மேற்கொள்ள வேண்டிய முன்னெச் சரிக்கை நடவடிக்கைகள் குறித்து கருத்துகளைத் தெரிவிக்கலாம்.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
சென்னை மாநகராட்சி சார்பில் வடகிழக்கு பருவமழையை எதிர் கொள்ள ரூ.18 கோடி செலவில் 1229 கி.மீ நீளத்துக்கு மழைநீர் வடிகால்வாய்கள் தூர்வாரப் பட்டுள்ளன. 33 புதிய மழைநீர் வடிகால்வாய்கள் மற்றும் 52 இணைப்பு மழைநீர் வடிகால்வாய்கள் ரூ.91 கோடி மதிப்பீட்டில் மேற் கொள்ளப்பட்டுள்ளது. 42 மீட்புக் குழுக்களும், 103 மோட்டார் பொருத் தப்பட்ட படகுகளும், பொதுமக்களை தங்க வைப்பதற்காக 156 நிவாரண முகாம்களும், உணவு தயாரிப்பதற்காக 4 நிவாரண மையங்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.
மேலும், மரக்கிளைகளை அப்புறப் படுத்துவதற்காக 45 மர அறுவை இயந்திரங்களும், வாகனங்களும், மழைக்காலங்களில் தொற்றுநோய்கள் ஏற்படாமல் தடுக்கவும், கொசுக்களை கட்டுப்படுத்தவும் 41 வாகனங்களுடன் 568 தெளிப்பான்களும், 434 கைத் தெளிப்பான்களும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழைநீர் தேங்கும் தாழ்வான பகுதிகளில் மழைக்கு முன்பே சம்பந்தப்பட்ட இடங்களில் படகுகளை தயார்நிலை யில் நிறுத்தவும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தயார் நிலையில் மருத்துவர்கள்
மாநகராட்சி மருத்துவத்துறையின் சார்பில் மண்டல அலுவலகங்களில் தலா 3 மருத்துவக் குழுக்கள் பணி யாற்றிடவும், தேவையான அளவு மருத்துவ முகாம்கள் நடத்திடவும், அவசர கால மருந்துகளைத் தயார் நிலையில் வைக்கவும் அறிவுறுத் தப்பட்டுள்ளது.
புகார் தெரிவிக்கலாம்
பொதுமக்கள் தங்கள் புகார்களை 24 மணி நேரமும் இயங்கும் கட்டுப் பாட்டு அறையில் உள்ள 044-25619206, 25619511, 25385005, 25384965, 25383694, 25367823, 25387570 ஆகிய தொலைபேசி எண்களுக்கும், வாட்ஸ் அப் மூலம் 9445477207, 9445477203, 9445477206, 9445477201, 9445477205 ஆகிய எண்களுக்கும் தெரிவிக்கலாம். மேலும் gccdm1@chennaicorporation.gov.in, gccdm2@chennaicorporation.gov.in, gccdm3@chennaicorporation.gov.in, gccdm4@chennaicorporation.gov.in, gccdm5@chennaicorporation.gov.in ஆகிய மின்னஞ்சல்கள் மூலமாகவும் புகார்களை தெரிவிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.