

சென்னை: தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரிய செயல்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் சென்னை கிண்டியில் உள்ள வாரிய தலைமை அலுவலகத்தில் நேற்று நடைபெற்றது. அதில் சுற்றுச்சூழல் துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் கலந்துகொண்டு, வாரிய செயல்பாடுகளை ஆய்வு செய்தார்.
அக்கூட்டத்தில் அவர் பேசியதாவது: பொதுமக்கள், பள்ளி, கல்லூரி மாணவர்கள், தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த மாட்டோம் என உறுதிமொழி ஏற்க வாரியம் நடவடிக்கை எடுக்க வேண்டும். ‘மீண்டும் மஞ்சப்பை' விழிப்புணர்வு செயல்பாட்டின் தொடர்ச்சியாக தமிழகத்தில் மேலும் 25 இடங்களில் ‘மீண்டும் மஞ்சப்பை' ஏடிஎம் இயந்திரங்களை நிறுவ துரித நடவடிக்கை எடுக்க வேண்டும்.
தமிழகத்தில் உள்ள குப்பை கிடங்குகளை மீட்டெடுத்து அவ்விடங்களில் காடுகளை வளர்க்கநடவடிக்கை எடுக்க வேண்டும். தமிழகம் முழுவதும் தொழிற்சாலைகள் மூலம் ‘குறுங்காடுகள் வளர்ப்பு’ திட்டத்தை செயல்படுத்தி வனப்பரப்பை அதிகரிக்க வழி செய்ய வேண்டும்.
பொது கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களை வாரிய இசைவாணையுடன் இயக்கவும், நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதைத் தடுக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும். வேலூரில் குரோமியக் கழிவுகளால் மாசடைந்த பகுதிகளை சீரமைக்கவும், ரசாயன தொழிற்சாலைகளின் கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்கள் மற்றும் காற்று மாசு தடுப்பு சாதனங்களின் இயக்கத்தை தொழில்நுட்ப குழுக்கள் அமைத்து கண்காணிக்க வேண்டும்.
விதிகளை மீறி இயங்கும் மணல் குவாரி, கிரானைட் குவாரிகளைக் கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டும். தோல் தொழிற்சாலைகளின் பொது கழிவுநீர் சுத்திகரிப்புநிறுவனங்களில் சேகரிக்கப்பட்டுள்ள கலவை உப்பை மறு உபயோகப்படுத்துவதற்கான தொழில்நுட்பங்களை உருவாக்க வேண்டும்.
தமிழகத்தில் ஒலி மாசு மற்றும் அதன் விளைவுகள் குறித்து பொதுமக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றார். இக்கூட்டத்தில் வாரியத் தலைவர் எம்.ஜெயந்தி, வாரிய உறுப்பினர் செயலர் ஆர்.கண்ணன், தலைமை சுற்றுச்சூழல் பொறியாளர் எஸ்.செல்வன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.