Published : 03 Sep 2022 06:56 AM
Last Updated : 03 Sep 2022 06:56 AM
திருச்சி: தமிழக அரசின் பட்ஜெட்டில் அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் வலியுறுத்தியுள்ளார்.
திருச்சியில் 3 நாட்கள் நடைபெறும் ஏஐடியுசி சார்பிலான தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தொழிலாளர்கள் சம்மேளனத்தின் 15-வது மாநில மாநாடு நேற்று தொடங்கியது.
மாநாட்டின் தொடக்கமாக வெஸ்ட்ரி பள்ளி அருகில் இருந்து மாநாடு நடைபெறும் எல்கேஎஸ் மகால் வரை பேரணி நடைபெற்றது.
இந்நிகழ்வுகளுக்கு சம்மேளனத்தின் தலைவரும், முன்னாள் எம்எல்ஏவுமான எம்.ஆறுமுகம் தலைமை வகித்தார்.
மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன், தமிழ்நாடு ஏஐடியுசி மாநிலத் தலைவர் கே.சுப்பராயன், சம்மேளன பொதுச் செயலாளர் ரா.ஆறுமுகம், துணைப் பொதுச் செயலாளர் கே.எம்.செல்வராஜ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
இதில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலாளர் இரா.முத்தரசன் பேசியது: பொதுப்பணித் துறை நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் அர்ப்பணிப்புமிக்கவர்கள்.
இந்தியா சொந்தக்காலில் நிற்க வேண்டும் என்பதற்காக ஜவஹர்லால் நேரு பிரதமராக இருந்தபோது, பொதுத் துறை நிறுவனங்கள் தொடங்கப்பட்டன. அடுத்தடுத்த பிரதமர்கள் பொதுத் துறை நிறுவனங்களை புதிதாக தோற்றுவித்தனர்.
ஆனால், தற்போதைய பிரதமர் மோடியின் 8 ஆண்டுகால ஆட்சியில் பொதுத் துறை நிறுவனங்கள் விற்கப்பட்டு வருகின்றன.
அதுமட்டுமின்றி, பொதுத் துறை நிறுவனங்கள், தொழிலாளர்களுக்கு எதிராக மத்திய அரசின் நடவடிக்கை, சட்டங்கள் உள்ளன.
மோடி அரசின் கைப்பாவையாக தமிழகத்தில் ஆட்சிசெய்தது அதிமுக. நமது அரசியல் நிலைப்பாட்டால் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டுள்ளது.
தற்போது திமுக ஆட்சியில் சில வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட்டுள்ள நிலையில், பல வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை.
தமிழக பட்ஜெட்டில் அரசுப் போக்குவரத்து கழகத்துக்கு நிதி ஒதுக்கீடு செய்ய வேண்டும்.
அரசு வாகனங்களுக்கு டீசல் வரியை ரத்து செய்யவேண்டும். ஆம்னி பேருந்துகள் மற்றும் லாபத்தில் இயங்கும்வழித்தடங்கள் நாட்டுடமையாக்கப்பட வேண்டும். சுங்கச்சாவடி கட்டணத்தை ரத்து செய்ய வேண்டும் என்றார்.
மாநாட்டில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநகரச்செயலாளர் எஸ்.சிவா மற்றும் சம்மேளன நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.
திருச்சி மாவட்ட ஏஐடியுசி பொதுச் செயலாளர் கே.சுரேஷ் வரவேற்றார். திருச்சி மண்டல ஏஐடியுசி தலைவர் நேருதுரை நன்றி கூறினார்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT