

திருச்சி: நெடுந்தூர சைக்கிள் பயணம் மேற்கோள்ளும் நபர்களுக்காக 'ஆடக்ஸ் ரேன்டோனர்ஸ்' கிளப் செயல்பட்டு வருகிறது. இதன் சார்பில் 200 கி.மீ, 300 கி.மீ, 400 கி.மீ, 600 கி.மீ தொலைவுக்கு அவ்வப்போது நெடுந்தூர சைக்கிள் பயணம் மேற்கொள்ளப்படும்.
அதன்படி, 40 மணிநேரத்துக்குள் திருச்சியிலிருந்து தனுஷ்கோடி அரிச்சல் முனை வரை 600 கி.மீ தொலைவு செல்லும் சைக்கிள் பயணம் நேற்று தொடங்கியது.
திருச்சி அரியமங்கலம் பழைய பால்பண்ணை அருகே இப்பயணத்தை மாடலான் மென்பொருள் நிறுவன நிர்வாக இயக்குநர் பி.ஆனந்த் தொடங்கி வைத்தார். கிளப்பின் திருச்சி கிளை நிர்வாகிகளான பிரசாந்த், விஜேஷ் உள்ளிட்டோர் இதற்கான ஏற்பாடுகளை செய்திருந்தனர்.
இதில் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்து 230 பேர் பங்கேற்றுள்ளனர். இந்த கிளப் மூலம் நடத்தப்படும் பயணங்களில் 600 கி.மீ நெடுந்தொலைவு சைக்கிள் பயணத்தில் 230 பேர் பங்கேற்பது, நாட்டிலேயே இதுதான் முதல்முறை என போட்டி ஏற்பாட்டாளர்கள் தெரிவித்தனர்.