

தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை வரும் 25-ம் தேதி முதல் 28-ம் தேதிக்குள் தொடங்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித் துள்ளது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருப்பதாவது:
தென்மேற்குப் பருவமழை தற் போது தெலங்கானாவில் விலகி விட்டது. தமிழ்நாடு, கேரளா வில் மட்டும் இப்பருவ மழை விலக்கிக் கொள்ளப் பட வேண்டும். அதையடுத்து வட கிழக்கு பருவமழை குறித்த அறிவிப்பு வெளியாகும்.
அக்டோபர், நவம்பர், டிசம்பர் மாதங்கள் வடகிழக்கு பருவ மழைக் காலம் ஆகும். இந்த கால கட்டத்தில் இயல்பாக 442 மில்லி மீட்டர் மழை பெய்யும். சில ஆண்டுகள் இப்பருவமழை அக்டோபர் 10 ம் தேதி தொடங்கி யுள்ளது. பல ஆண்டுகள் அக்டோபர் 20-ம் தேதிக்கு பிறகு தொடங்கியிருக்கிறது. பொதுவாக 19, 20 தேதியில் தொடங்க வேண்டும். இந்தாண்டு காற்றின் போக்கில் மாற்றம் ஏற்படாததால் வடகிழக்குப் பருவமழை தள்ளிப்போகிறது.
தற்போது கிழக்கு மத்திய வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியிருப்பதால் காற்று அந்தப் பகுதியை நோக்கி வீசிக் கொண்டிருக்கிறது. அதனால் பருவமழை தாமதமாகிறது. இந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவா காமல் இருந்திருந்தால் தமிழ்நாட் டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கியிருக்கும். இருப் பினும், வரும் 25-ம் தேதியில் இருந்து 28-ம் தேதிக்குள் வட கிழக்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
2006-ம் ஆண்டு முதல் 2011-ம் ஆண்டு வரை வடகிழக்குப் பருவ மழை இயல்பையொட்டியே (442 மில்லி மீட்டர்) இருந்தது. 2012-ல் இயல்பைவிட 16 சதவீதம் குறைவாகவும், 2013-ல் இயல் பைவிட 33 சதவீதம் குறைவாக வும், 2014-ல் இயல்பைவிட 2 சதவீதம் குறைவாகவும் மழைப்பொழிவு இருந்தது.
கடந்தாண்டு அக்டோபர் 19-ல் தென்மேற்கு பருவமழை விலக் கிக்கொள்ளப்பட்டது. 28-ம் தேதி வடகிழக்குப் பருவமழை தொடங்கியது. அக்டோபர் 31-ம் தேதி வரை 133.2 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட 27 சதவீதம் குறைவு. நவம்பர் மாதம் 10-ம் தேதி தமிழகம் முழுவதும் கனமழை பெய்தது. இம்மாதத்தில் 385.9 மி.மீ. மழை பதிவானது இது இயல்பைவிட 125 சதவீதம் அதிகம். டிசம்பர் 1-ம் தேதி சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மாவட்டங்களில் மிக பலத்த மழை கொட்டியது. டிசம்பரில் 156.7 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட 76 சதவீதம் அதிகம். கடந்தாண்டு வடகிழக்கு பருவமழைக் காலத் தில் மொத்தம் 676.1 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட 53 சதவீதம் அதிகமாகும்.
இதுபோலவே கடந்த 2005-ம் ஆண்டு வடகிழக்கு பருவமழைக் காலத்தில் மொத்தம் 771.8 மி.மீ. மழை பதிவானது. இது இயல்பைவிட 79 சதவீதம் அதிகம் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இன்றைய (அக்.20) வானிலையைப் பொருத்தவரை வெப்பச்சலனம் காரணமாக கன்னியாகுமரி, தூத்துக்குடி, அதிராம்பட்டினம் ஆகிய இடங்களில் மாலை அல்லது இரவு நேரத்தில் லேசான மழை பெய்யக்கூடும். சென்னை உட்பட வடதமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை பெய்ய வாய்ப்பில்லை. சென்னையில் அதிகபட்ச வெப்பநிலை 34 டிகிரி செல்சியஸாகவும், குறைந்தபட்ச வெப்பநிலை 25 டிகிரி செல்சியஸாகவும் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
அதிகபட்ச மழை
கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நாங்குநேரியில் 60 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் கூடலூர், உத்தமபாளையத்தில் தலா 30 மி.மீ., சேரன்மகாதேவியில் 20 மி.மீ., பெரியார், சங்கரன்கோவில், பாளையங்கோட்டையில் தலா 10 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.