Published : 03 Sep 2022 06:28 AM
Last Updated : 03 Sep 2022 06:28 AM

பருவநிலை கைகொடுக்காததால் தூத்துக்குடியில் உப்பு உற்பத்தி பாதியாக சரிவு: விலை உயர்வால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டமில்லை

தூத்துக்குடியில் நேற்று முன்தினம் பெய்த பலத்த மழை காரணமாக உப்பளங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. படம்: என்.ராஜேஷ்

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்தசில தினங்களாக பெய்த மழையால்உப்பளங்களில் மழைநீர் தேங்கிஉப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. உப்பு உற்பத்திக்கு ஏற்றகாலத்தில் பருவநிலை மாறுபாட்டால் உப்பு உற்பத்தி பாதியாக குறைந்துள்ளது.

தூத்துக்குடி மாவட்டத்தில் வேம்பார், தூத்துக்குடி, முத்தையாபுரம், முள்ளக்காடு, ஆறுமுகநேரி பகுதிகளில் சுமார் 20 ஆயிரம் ஏக்கரில் உப்பளங்கள் அமைந்துள்ளன. இவற்றில் சுமார் 30 ஆயிரம் தொழிலாளர்கள் வேலை செய்கின்றனர். தூத்துக்குடி மாவட்டத்தில் ஆண்டுக்கு சராசரியாக 25 லட்சம்டன் உப்பு உற்பத்தி செய்யப்படுகிறது. நாட்டின் உப்பு உற்பத்தியில் குஜராத் மாநிலத்துக்கு அடுத்தபடியாக தூத்துக்குடி உள்ளது.

இங்கு ஜனவரி மாதம் உப்புஉற்பத்திக்கான பணிகள் தொடங்கும். ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான 6 மாதங்கள் தான் உப்புஉற்பத்திக்கு உகந்த காலம். அக்டோபர் மாதம் முதல் வாரத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதும் உப்பு உற்பத்தி முடிவடையும். ஜூலை, ஆகஸ்ட் மாதங்கள் தான் உப்பு உற்பத்திக்கு மிகவும் உகந்த காலமாக கருதப்படுகிறது.

இந்த ஆண்டு அவ்வப்போது பெய்த மழை மற்றும் சரியாக வீசாதமேல் திசைக் காற்று போன்றவற்றால் ஜூலை, ஆகஸ்ட் மாதங்களில் உப்பு உற்பத்தி பாதியாககுறைந்துள்ளது. இந்நிலையில் மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்த மழையால் உப்பளங்களில் மழைநீர் தேங்கி உப்பு உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து தூத்துக்குடி சிறிய அளவு உப்பு உற்பத்தியாளர் சங்கசெயலாளர் ஏ.ஆர்.ஏ.எஸ்.தனபாலன் கூறியதாவது:

இந்த ஆண்டு ஆடி மாதம் தொடக்கமான ஜூலை 17-ம் தேதியில் இருந்தே அவ்வப்போது மழைபெய்துள்ளது. மேலும், ஆடி மாதத்தில் வழக்கமாக வீசும் மேல் திசைகாற்றும் இந்த ஆண்டு சரியாக வீசவில்லை. இந்த உற்பத்திக்கு மிகவும் உகந்த இக்காலத்தில் உப்பு விளைச்சல் சரியாகநடைபெறவில்லை. ஆகஸ்ட் மாதத்தில் வழக்கமாக உற்பத்தியாகும் அளவைவிட இந்த ஆண்டு பாதிஅளவுக்கு தான் உப்பு உற்பத்தியாகியுள்ளது.

இந்த ஆண்டு இதுவரை 50 சதவீதம், அதாவது 12.5 லட்சம் டன் அளவுக்கு மட்டுமே உப்பு உற்பத்தி நடைபெற்றுள்ளது. அக்டோபர் முதல் வாரம் வரை, அதாவதுஇன்னும் 5 வாரங்கள் உப்பு உற்பத்திக்கான காலம் உள்ளது. தற்போது மழைநீர் உப்பளங்களில் தேங்கியுள்ளதால் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. மழைநீர் வடிந்து உப்பு உற்பத்தி இயல்புநிலைக்கு திரும்ப ஒரு வாரம் ஆகும். அதேநேரத்தில் தொடர்ந்து மழை பெய்ய வாய்ப்பு இருப்பதால் மேலும் தாமதமாக வாய்ப்பு உள்ளது.

எனவே, இன்னும் 10 சதவீதம் அளவுக்கு வேண்டுமானால் உப்புஉற்பத்தி நடைபெறலாம். மொத்தத்தில் இந்த ஆண்டு உப்பு உற்பத்தி 60 சதவீதத்தை தாண்டாது.

உற்பத்தி குறைவு காரணமாக விலை உயர்ந்துள்ளது. தற்போது உப்பு தரத்தை பொறுத்து ஒரு டன் ரூ.2 ஆயிரம் முதல் ரூ.3 ஆயிரம் வரை விலை போகிறது. நல்ல விலை இருப்பதால் உற்பத்தியாளர்களுக்கு நஷ்டம் ஏற்படாது. ஆனால் பெரிய அளவில் லாபம் இருக்காது என்றார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x