Published : 03 Sep 2022 06:24 AM
Last Updated : 03 Sep 2022 06:24 AM

இ-சேவை மையம், சைக்கிள் ஸ்டாண்டில் வகுப்புகள்: திப்பணம்பட்டி அரசு பள்ளியில் கட்டிட வசதியின்றி அவதி

திப்பணம்பட்டி ஊராட்சியில் உள்ள வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் கட்டிட வசதி, அடிப்படை வசதிகளின்றி இ-சேவை மையத்தில் தற்காலிக வகுப்பறை அமைக்கப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

தென்காசி: திப்பணம்பட்டி ஊராட்சியில் உள்ள வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர்கள் கட்டிட வசதி, அடிப்படை வசதிகளின்றி அவதிப்படுகின்றனர்.

தென்காசி மாவட்டம், பாவூர்சத்திரம் அருகே உள்ள திப்பணம்பட்டி ஊராட்சியில் நாராயணப்பேரி குளத்துக் கரையை ஒட்டி வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளி அமைந்துள்ளது. இப்பள்ளியில் போதிய இட வசதி இல்லாததால் வகுப்பறை வசதிகள், அடிப்படை வசதிகளின்றி மாணவர்கள் அவதிப்பட்டு வருகின்றனர்.

இதுகுறித்து ‘இந்து தமிழ்’ நாளிதழின் உங்கள் குரல் தொலைபேசி எண்ணில் பேசிய திப்பணம்பட்டியைச் சேர்ந்த தங்கராஜா கூறியதாவது:

வினைதீர்த்த நாடார்பட்டி அரசு மேல்நிலைப் பள்ளியில் சுமார் 600 மாணவர்கள் பயில்கின்றனர். பள்ளியில் 6 வகுப்பறைகள் மட்டுமே உள்ளன. விளை யாட்டு மைதானம், ஆய்வகம், நூலகம் இல்லை.

மாணவர்கள் சைக்கிள் நிறுத்த வேண்டிய இடத்திலும், அருகிலுள்ள இ-சேவை மையத் திலும், மரத்தடி நிழலிலும் வகுப்பு நடக்கிறது. மாணவர்கள் தங்கள் சைக்கிள்களை சாலையோரத்தில் நிறுத்திவிட்டு பள்ளிக்குச் செல்கின்றனர். திறந்தவெளியில் அமர்ந்து படிப்பதால் மாணவர்கள் பெரிதும் சிரமப்படுகின்றனர்.

பள்ளி ஆசிரியர்கள் மற்றும் பொதுமக்களின் சிறந்த பங்களிப்பு டன் மாணவர்கள் கல்வியில் சிறந்து விளங்குகின்றனர். நடப்பு கல்வியாண்டில் 2 மாணவர்கள் தமிழக அரசின் ‘இன்ஸ்பைரேஷன்’ விருது பெற்று பள்ளிக்கு பெருமை சேர்த்துள்ளனர்.

பள்ளியில் மாணவர்கள் சைக்கிள்களை நிறுத்துமிடம்
தற்காலிக வகுப்பறையாக மாற்றப்பட்டு பாடம் நடத்தப்படுகிறது.

தற்போது பள்ளி செயல்பட்டு வரும் இடம் மிகவும் பற்றாக் குறையாக இருப்பதால் மேல்நிலைப்பள்ளிக்கு கூடுதல் வகுப்பறைகள், ஆய்வகங்கள், சைக்கிள் நிறுத்துமிடம், நூலகம், விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு போதிய இட வசதி இல்லை. பள்ளியில் இருபுறங்களில் நீர்நிலை, விவசாய நிலங்கள், குடியிருப்புகள் உள்ளன.

ஆனால், பள்ளியில் இருந்து சிறிது தொலைவில் பண்பொழி திருமலைக்குமார சுவாமி கோயிலுக்கு சொந்தமான சுமார் 4.76 ஏக்கர் இடம் உள்ளது. இந்த இடம் மூலம் பல ஆண்டுகளாக கோயிலுக்கு எந்த வருமானமும் இல்லை. அந்த இடம் பராமரிப்பின்றி முள்புதர்களாக, குப்பை சூழ்ந்து கிடக்கிறது.

அந்த இடத்தை நீண்டகால குத்தகைக்கு பள்ளி வகுப்பறைகள் கட்டுவதற்கு கொடுத்தால் மாணவர் கள் பெரிதும் பயனடைவார்கள். குத்தகையை கல்வித்துறை செலுத்துவதற்கு சிக்கல் இருந்தால் அதையும் செலுத்த கிராம மக்கள் தயாராக உள்ளனர்.

இதனால் அறநிலையத்துறைக்கும் வருவாய் கிடைக்கும். மாணவர்கள் நலன் கருதி அறநிலையத்துறைக்கு சொந்தமான பயன்பாடின்றி கிடக்கும் இடத்தை பள்ளிக்கு வழங்க அரசும், அதிகாரிகளும் விரைவில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x