

திருத்தணி நகராட்சியின் அதிமுக கவுன்சிலர் மர்ம கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார். கடை அடைப்பு, சாலை மறியல், போலீஸார் மீது தாக்குதல், தடியடி போன்றவற்றால் திருத்தணியில் பதற்றமான சூழல் நிலவுகிறது.
திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி சன்னதி தெருவைச் சேர்ந்தவர் ஆப்பிள் ஆறுமுகம் என்கிற கே.ஆறுமுகம்(42). இவர், திருத்தணி நகராட்சியின் 13-வது வார்டு கவுன்சிலராகவும், திருவள்ளூர் மாவட்ட திட்டக்குழு உறுப்பினராகவும் இருந்து வந்தார். உள்ளாட்சி தேர்தலில் போட்டியிட திருத்தணி நகராட்சியின் 13-வது வார்டு வேட்பாளராகவும் அதிமுக தலைமையால் அறிவிக்கப்பட்டிருந்தார்.
இவர், திருத்தணி - கன்னிகாபுரம் சாலையில் உள்ள இந்திரா நகரில் குடிநீர் தயாரிப்பு தொழிற்சாலை நடத்தி வந்தார். மேலும், ரியல் எஸ்டேட் தொழிலிலும் ஈடுபட்டு வந்தார்.
இந்நிலையில், வழக்கம்போல் நேற்று காலை வீட்டிலிருந்து இந்திரா நகரில் உள்ள தனது தொழிற்சாலைக்கு காரில் சென்றார். அப்போது ஆட்டோவில் பின் தொடர்ந்து சென்ற 5-க்கும் மேற்பட்ட மர்ம நபர்கள் அரிவாள், கத்தி போன்ற பயங்கர ஆயுதங்களுடன் இந்திரா நகர் பகுதியில் காரை வழிமறித்துள்ளனர்.
இதனால், அதிர்ச்சியடைந்த ஆறுமுகம் காரை திருப்ப முயன்றார். அதற்குள் மர்ம நபர்கள் காரின் பக்கவாட்டு கண்ணாடிகளையும், முன் பக்க கண்ணாடியையும் ஆயுதங்களால் அடித்து உடைத்தனர். பிறகு, மிளகாய் பொடியை ஆறுமுகத்தின் மீது தூவினர். இதில் நிலைகுலைந்த ஆறுமுகத்தால் காரிலிருந்து உடனடியாக தப்பி ஓட முடியவில்லை. பின்னர் காரில் இருந்து அவரை வலுக்கட்டாயமாக வெளியே இழுத்து சரமாரியாக அரிவாளால் வெட்டிவிட்டு அந்த கும்பல் தப்பியது.
பின்னர், அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக திருத்தணி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். மருத்துவர்கள் பரிசோத னையில் அவர் ஏற்கெனவே உயிரிழந்தது தெரியவந்தது.
இதுகுறித்து வழக்குப்பதிவு செய்துள்ள திருத்தணி போலீ ஸார், அரசியல் காரணம் மற்றும் தொழில் போட்டியால் கொலை செய்யப்பட்டாரா என்ற கோணத்தில் விசாரணை நடத்தி கொலையாளிகளை தீவிரமாக தேடி வருகின்றனர். கொலையான ஆறுமுகத்துக்கு சித்ரா என்ற மனைவியும், இரு மகன்கள், ஒரு மகளும் உள்ளனர்.
கொலை முயற்சி
கடந்த மாதம் 30-ம் தேதி திருத் தணி பஸ் நிலையம் அருகே உள்ள மேட்டுத் தெருவில் நடைபயிற்சி மேற்கொண்டிருந்தபோது, முகமூடி அணிந்த மர்ம நபர்கள் 4 பேர், ஆறுமுகத்தை அரிவாளால் வெட்ட முயன்றனர். இதுகுறித்து, வேலூர் மாவட்டம், அரக்கோணத்தை சேர்ந்த சதீஷ்குமார்(26) என்பவரை போலீஸார் கைது செய்தனர். அந்த சம்பவம் நடந்த 9-வது நாளில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டுள்ளார். போலீஸார் உரிய பாதுகாப்பு கொடுத்திருந்தால், அவர் கொலை செய்யப்பட்டிருக்க மாட்டார் என அதிமுக தரப்பில் கூறப்படுகிறது.
கொலைச் சம்பவத்தை தொடர்ந்து திருத்தணியில் 800-க்கும் மேற்பட்ட கடைகள் நேற்று அடைக்கப்பட்டன. போலீ ஸார் பாதுகாப்பு கொடுக்கத் தவறிவிட்டதாக டிஎஸ்பி ஈஸ் வரனுக்கும் அதிமுகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. கொலையாளிகளை உடனே பிடிக்கக் கோரி அரக்கோணம் எம்பி அரி, திருத்தணி எம்எல்ஏ நரசிம்மன் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட அதிமுகவினர் சென்னை புறவழிச் சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.
இதையடுத்து, சம்பவ இடத்துக்கு வந்த திருவள்ளூர் எஸ்பி சாம்சன், ஏடிஎஸ்பி ஸ்டாலின் ஆகியோர் அதிமுகவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அனைவரும் கலைந்து சென்றனர். அப்போது திருவள்ளூர் டிஎஸ்பி ஈஸ்வரன் மீது சிலர் தாக்குதல் நடத்த முயன்றனர். உடனே அங்கு இருந்த நூற்றுக்கும் மேற்பட்ட போலீஸார், தடியடி நடத்தி அனைவரையும் விரட்டினர்.
இந்த சம்பவத்தில், 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினர் மற்றும் செய்தி சேகரிக்கச் சென்ற 3 நிருபர்கள், இரு போலீஸார் காயமடைந்தனர். இதில், ஒரு நிருபர் ஆபத்தான நிலையில் திருத்தணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இந்தச் சம்பவம் தொடர்பாக 10-க்கும் மேற்பட்ட அதிமுகவினரை போலீஸார் கைது செய்தனர்.
திருத்தணியில் பதற்றமான சூழல் நிலவி வருவதால், 500-க்கும் மேற்பட்ட போலீஸார் குவிக்கப்பட்டுள்ளனர். அரசு மற்றும் தனியார் பஸ்கள் நேற்று திருத்தணி நகருக்குள் வரவில்லை. கடைகள் அடைக்கப்பட்டதால் நேற்று ஆயுத பூஜைக்கான வியாபாரமும் முடங்கியது.