பிரிந்த தம்பதியர் குழந்தையை ஒப்படைக்க கோரும் வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம்: தீர்ப்பு விவரம்

சென்னை உயர் நீதிமன்றம்
சென்னை உயர் நீதிமன்றம்
Updated on
1 min read

சென்னை: குடும்ப நல நீதிமன்ற சட்டம் கொண்டு வந்த பின், பிரிந்த தம்பதியர் தங்களது குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக, சென்னை உயர் நீதிமன்ற 5 நீதிபதிகள் அமர்வில் பெரும்பான்மையாக தீர்ப்பளிக்கப்பட்டுள்ளது.

குடும்பநல நீதிமன்ற சட்டம் கொண்டு வந்த பின், குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்க உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக 1989-ம் ஆண்டு சென்னை உயர் நீதிமன்றத்தின் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்திருந்தது. இந்நிலையில், குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்கில் உயர் நீதிமன்றத்திற்கு அதிகாரம் உள்ளதா? 1989-ம் ஆண்டு தீர்ப்பு குடும்பநல நீதிமன்ற சட்டத்துக்கு பிறகும் பொருந்துமா எனக் கேள்வி எழுப்பிய தனி நீதிபதி பார்த்திபன், இந்த விவகாரம் குறித்து முடிவெடுக்க மூன்று நீதிபதிகள் அமர்வை அமைக்க தலைமை நீதிபதிக்கு பரிந்துரைத்திருந்தார். அந்த உத்தரவில், "குடும்ப நல நீதிமன்றங்களில் உள்ள ஆலோசகர்கள், உளவியல் நிபுணர்கள் மற்றும் அடிப்படை உள்கட்டமைப்பு வசதிகள் உயர் நீதிமன்றத்தில் இல்லை" எனச் சுட்டிக்காட்டியிருந்தார்.

அதன்படி நீதிபதி பி.என்.பிரகாஷ் தலைமையில் மூன்று நீதிபதிகள் அமர்வு அமைக்கப்பட்ட நிலையில், 1989-ம் ஆண்டும் மூன்று நீதிபதிகள் அமர்வு தீர்ப்பளித்துள்ளதால், வழக்கை ஐந்து நீதிபதிகள் அமர்வுக்கு மாற்ற தலைமை நீதிபதிக்கு பதிந்துரைக்கப்பட்டது. இதையடுத்து பிரிந்த தம்பதியர் குழந்தையை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்க முடியுமா என்ற கேள்விக்கு விடை காண நீதிபதிகள் பி.என்.பிரகாஷ், ஆர்.மகாதேவன், எம்.சுந்தர், என்.ஆனந்த் வெங்கடேஷ் மற்றும் ஏ.ஏ.நக்கீரன் ஆகிய ஐந்து நீதிபதிகள் அமர்வை அமைத்து சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

இந்த வழக்கில் ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு இன்று தீர்ப்பளித்துள்ளது. இந்த தீர்ப்பில் நீதிபதிகள் மகாதேவன், சுந்தர் மற்றும் நக்கீரன் ஆகியோர், “குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை உயர் நீதிமன்றம் விசாரிக்க அதிகாரம் உள்ளது” என்றும், நீதிபதிகள் பிரகாஷ் மற்றும் ஆனந்த் வெங்கடேஷ் ஆகியோர், "உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரமில்லை" என்றும் தீர்ப்பளித்துள்ளனர்.

பெரும்பான்மையான நீதிபதிகள், உயர் நீதிமன்றத்துக்கு அதிகாரம் உள்ளதாக தீர்ப்பளித்துள்ளதால், குடும்ப நல நீதிமன்ற சட்டம் காரணமாக குழந்தைகளை ஒப்படைக்க கோரிய வழக்குகளை விசாரிக்கும் அதிகாரம் நீடிக்கும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in