

சேலம்- சென்னை 8 வழிச்சாலை திட்டத்தை செயல்படுத்த மாட்டோம் என்ற தேர்தல் வாக்குறுதியை திமுக அரசு நிறைவேற்ற வேண்டும் என்று வலியுறுத்தி சேலம் அருகே 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
மத்திய, மாநில அரசுகள் இணைந்து, சேலம்- சென்னை இடையே ரூ.10,000 கோடி மதிப்பில் 8 வழிச்சாலைத் திட்டத்தை அறிவித்து, அதற்கான நிலம் கையகப்படுத்தும் பணிகளைத் தொடங்கின.
இந்த திட்டத்துக்காக நிலம் கையகப்படுத்தும் பணிகள் தொடங்கப்பட்ட சேலம், தருமபுரி, திருவண்ணாமலை, காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் விவசாயிகள் எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டனர்.
திட்டத்தை எதிர்த்து பல்வேறு தரப்பினர் தொடர்ந்த வழக்கில் நீதிமன்ற உத்தரவையடுத்து, 8 வழிச்சாலைத் திட்டம் ரத்து செய்யப்பட்டது. இந்நிலையில், 8 வழிச்சாலை அமைப்பது தொடர்பாக அமைச்சர் எ.வ.வேலு வெளியிட்ட கருத்தைக் கண்டித்து, சேலத்தை அடுத்த வீரபாண்டி அருகே பூலாவரி புஞ்சைக்காடு என்ற இடத்தில், 8 வழிச்சாலை எதிர்ப்பு இயக்கத்தினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ஒருங்கிணைப்பாளர் மோகன சுந்தரம் தலைமையில் சுமார் 50 பேர் பங்கேற்று, ‘8 வழிச்சாலைத் திட்டத்தை நிறைவேற்ற மாட்டோம் என்ற தேர்தல் வாக்குறுதியை, திமுக அரசு நிறைவேற்ற வேண்டும்’ என்று முழக்கங்களை எழுப்பினர். விவசாயிகள் சிலர் கால்நடைகளுடன் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.