Published : 02 Sep 2022 03:54 AM
Last Updated : 02 Sep 2022 03:54 AM

தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்க முதல்வர் ஸ்டாலின் இன்று கேரளா பயணம் - பினராயி விஜயனை சந்திக்கிறார்

சென்னை: தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று கேரளா செல்கிறார். மேலும், திருவனந்தபுரத்தில் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்தித்து முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்கள் குறித்து பேசவுள்ளார்.

தென் மாநிலங்களில் நிலவும் சட்டம் - ஒழுங்கு பிரச்சினைகள், உட்கட்டமைப்பு வசதிகள், சுகாதாரம், மாநில எல்லை விவகாரங்கள், பெண்கள் பாதுகாப்பு, மாநிலங்களுக்கிடையிலான நதிநீர் பங்கீடு உள்ளிட்டவை தொடர்பாக மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில், மாநில முதல்வர்களுடன் விவாதிக்க, தென்மண்டல கவுன்சில் கூட்டம் நடத்தப்படுவது வழக்கம். கடந்தாண்டு இந்தக் கூட்டம் திருப்பதியில் நவம்பர் மாதம் நடைபெற்றது.

முதல்வர்கள் பங்கேற்பு

இந்நிலையில் இந்த கவுன்சிலின் 30-வது கூட்டம் நாளை (செப்.3) கேரள மாநிலம் திருவனந்தபுரத்தில் நடைபெறுகிறது. மத்திய உள்துறை அமைச்சகம் சார்பில் நடைபெறும் இக்கூட்டத்தில், தமிழகம், கேரளா, ஆந்திரா, கர்நாடகா, தெலங்கானா மற்றும் புதுச்சேரி முதல்வர்கள் பங்கேற்கின்றனர்.

முல்லை பெரியாறு அணை

இதற்கான அழைப்பை ஏற்று, தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்பதற்காக இன்று காலை 11.40 மணிக்கு சென்னையில் இருந்து முதல்வர் மு.க.ஸ்டாலின், திருவனந்தபுரம் செல்கிறார். பிற்பகல் கேரள முதல்வர் பினராயி விஜயனை சந்திக்கிறார். சந்திப்பின்போது, முல்லை பெரியாறு அணையின் நீர்த்தேக்கம், பேபி அணையை பலப்படுத்துதல் உள்ளிட்ட விவகாரங்கள், சிறுவாணி விவகாரம், நெய்யாறு பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து விவாதிக்கிறார்.

ஏற்கெனவே இதுதொடர்பாக நீர்வளத் துறை செயலர்கள் நடத்திய பேச்சுவார்த்தைகள், தொடர்ந்து அடுத்தடுத்த குழுக்கள் அமைப்பது குறித்தும் விவாதிக்க உள்ளனர்.

தொடர்ந்து, இன்று மாலை கேரள அரசின் சார்பில் நடைபெறும் கலை, இசை நிகழ்ச்சியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்கிறார். இன்று திருவனந்தபுரத்தில் தங்கும் முதல்வர், நாளை காலை 10 மணிக்கு தென்மண்டல கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்று, தமிழகம் தொடர்பான கருத்துகளை எடுத்து வைக்கிறார்.

அதன்பின், நாளை இரவு 7 மணிக்கு அங்கிருந்து விமானம் மூலம் சென்னை புறப்பட்டு வருகிறார்.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x