

சென்னை: தமிழகத்தில் கடந்த ஒரு மாதத்தில் 1.66 கோடி பேர் வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைத்துள்ளதாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரத சாஹு தெரிவித்துள்ளார்.
வாக்காளர் அட்டையுடன் ஆதார் எண்ணை இணைக்கும் பணி நாடுமுழுவதும் கடந்த ஆக.1-ம் தேதிமுதல் நடந்து வருகிறது. இதற்காக ‘6பி’ என்ற படிவத்தை அறிமுகம் செய்துள்ள தேர்தல் ஆணையம், வீடு வீடாக வாக்காளர் பதிவுஅலுவலரை அனுப்பி, விவரங்களை பெற்று வருகிறது.
இதுதவிர, ‘என்விஎஸ்பி’ இணையதளம் (https://www.nvsp.in) மற்றும் ‘1950’ என்ற தொலைபேசி எண் ஆகியவை மூலமாக ஆதார் பதிவு மேற்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளது.
இந்நிலையில், தமிழகத்தில் இப்பணிகளின் நிலை தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாஹு கூறியதாவது:
தமிழகத்தில் மொத்தம் 6.22 கோடி வாக்காளர்கள் உள்ளனர். இதில், ஆதார் இணைப்பு பணி தொடங்கப்பட்ட ஆக.1 முதல் 31-ம்தேதி வரை 1.66 கோடி பேர் தங்கள்ஆதார் எண்ணை வாக்காளர் அட்டையுடன் இணைத்துள்ளனர். இது 26.78 சதவீதம். ஸ்மார்ட்போனில் உள்ள பிளேஸ்டோரில் ‘வோட்டர் ஹெல்ப் லைன்’ என்ற செயலியை பதிவிறக்கம் செய்து, அதன் மூலமாகவும் ஆதார் எண்ணை இணைக்க முடியும்.
தமிழகத்தில் உள்ள 68 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாக்குச்சாவடிகளில் உள்ள வாக்குச்சாவடி அலுவலர்கள் வழக்கமாக திருத்தப் பணியின்போது, வீடு வீடாக சென்று, வாக்காளர் பெயர் சேர்ப்பு, நீக்கம், முகவரி மாற்றம் உள்ளிட்ட பணிகளை மேற்கொள்வார்கள்.
இப்பணிக்காக அவர்களுக்கு மாதம் ரூ.600 என ஆண்டுக்கு ரூ.7,200 வழங்கப்படுகிறது. குறிப்பிட்ட நாட்களில் வாக்காளர் பட்டியல் திருத்தல் சிறப்பு முகாம் நடக்கும்போது ரூ.1,000 வழங்கப்படும். தற்போது இவர்களே வீடு வீடாக சென்று ஆதார் இணைப்பையும் மேற்கொள்கின்றனர்.
வாக்காளர் அட்டை - ஆதார் இணைப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில்,வாக்குச்சாவடி அலுவலர்களுக்காக 2 வீடியோ, வாக்காளர்களுக்காக 3 வீடியோ என மொத்தம்5 வீடியோக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.