

சென்னை: சுதந்திரப் போராட்ட வீரர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாளையொட்டி, அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் புகழாரம் சூட்டியுள்ளனர்.
இதுதொடர்பாக பிரதமர் மோடி தனது ட்விட்டர் பக்கத்தில், ‘மாவீரன் பூலித்தேவனுக்கு அவரது பிறந்தநாளில் வணக்கங்களை செலுத்துகிறேன். அவரது வீரமும், உறுதிப்பாடும் எண்ணற்றோருக்கு ஊக்கமளித்து வருகிறது. முன்னணியில் நின்று அந்நிய ஏகாதிபத்தியத்தை எதிர்த்துப் போரிட்டவர். மக்களுக்காக எப்போதும் தளராது பாடுபட்டவர்’ என குறிப்பிட்டுள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின்: ‘சல்லிக்காசு தரமுடியாது’ என கூறி ஆங்கிலேயரை விரட்டியடித்து இந்திய விடுதலை வரலாற்றின் முதல் ஏட்டை எழுதிய மாவீரர் பூலித்தேவனின் பிறந்தநாளில் அவருக்கு என் வீரவணக்கம். நெற்கட்டும்செவலில் நினைவு மாளிகை அமைத்து அவரது தியாகத்தை போற்றியது திமுக அரசு. இந்தியா முழுமையும் அவரை போற்றச் செய்வோம்.
எதிர்க்கட்சி தலைவர் பழனிசாமி: ஆங்கிலேய அரசை எதிர்த்து, நெஞ்சுரம்கொண்டு போரிட்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ என்று முதன்முதலில் வீரமுழக்கமிட்டு பல வெற்றிகளை கண்ட சரித்திரம் போற்றும் மாமன்னர் பூலித்தேவனின் 307-வது பிறந்தநாளில் அவரின் வீரத்தை போற்றி அவரது படத்துக்கு மலர்தூவி மரியாதை செலுத்தினேன்.
மதிமுக பொதுச் செயலாளர் வைகோ: ஆங்கிலேயரை எதிர்த்து இந்தியாவிலேயே முதன்முதலில் வீரவாளை உயர்த்தி, 3 போர்க்களங்களில் வெள்ளையரை தோற்கடித்து வெற்றிக் கொடி ஏற்றியவர் நெற்கட்டும்செவல் மாமன்னர் மாவீரர் பூலித்தேவன். அவரது தியாகமும், வீரமும் வணக்கத்துக்கு உரியவை.
அமமுக பொதுச் செயலாளர் டிடிவி தினகரன்: தென்பாண்டிச் சீமையில் இருந்து ஒட்டுமொத்த இந்தியாவுக்கும் முதன்முதலாக விடுதலைக் கனலை மூட்டிய மாமன்னர் பூலித்தேவனின் ஜெயந்தி விழாவில், ‘உயிரைவிட தேசம் பெரிது’ என்ற உயர் குணத்தோடு, நம் நாட்டுக்காக தியாகம் புரிந்த அந்த மாவீரரை எந்நாளும் போற்றி வணங்கிடுவோம்.
நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான்: ஒரே ரத்தம். அதே வீரம். வீரமிகு நமது பாட்டனார் பூலித்தேவனின் வீரத்தை போற்றுவோம். இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.
தென்காசி மாவட்டம் நெற்கட்டும்செவல் பகுதியில் அமைந்துள்ள பூலித்தேவன் சிலைக்கு தமிழக அரசு சார்பில் அமைச்சர்கள் சாத்தூர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு உள்ளிட்டோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
அங்கு அதிமுக சார்பில் முன்னாள் அமைச்சர்கள் நத்தம் விஸ்வநாதன், திண்டுக்கல் சீனிவாசன், கடம்பூர் ராஜு, செல்லூர் ராஜு, தளவாய் சுந்தரம், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.
அமமுக சார்பில் கட்சியின் தலைமை நிலைய செயலாளர் எஸ்விஎஸ்பி மாணிக்கராஜா, அமைப்பு செயலாளர் வி.பி.குமரேசன், இளைஞர் பாசறை செயலாளர் வி.மணிகண்டன் உள்ளிட்டோர் மரியாதை செலுத்தினர்.