5 ஏக்கரை அபகரிக்க முயன்றதை தட்டிக்கேட்டதால் ஆத்திரம்: பெண்களிடம் அத்துமீறலில் ஈடுபட்டதாக திமுக ஒன்றிய கவுன்சிலர் மீது புகார்

யேசு ரட்சகர்
யேசு ரட்சகர்
Updated on
1 min read

கள்ளக்குறிச்சி: நில அபகரிப்பில் ஈடுபட முயன்று, அதை எதிர்த்த பெண்களுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாக திமுக கவுன்சிலர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.

எனினும், போலீஸார் அவர் மீது நடவடிக்கை ஏதும் எடுக்காத நிலையில், மீண்டும் அந்த கவுன்சிலர் வீடு புகுந்து,சம்பந்தப்பட்ட பெண்களிடம் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

பெண்கள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்படுத்திய திமுக ஒன்றிய கவுன்சிலரை கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டம் மூங்கில்துறைப்பட்டு அருகே உள்ள சுத்தமலை கிராமத்தைச் சேர்ந்தவர் ஆண்ட்ரூ வின்சென்ட். இவர் பெங்களூருவில் தங்கி வேலை பார்த்து வருகிறார். இவரது சொந்த ஊரான சுத்தமலை கிராமத்தில் அவரது மனைவி மற்றும் 2 மகள்கள் வசித்து வருகின்றனர். வின்சென்ட்டின் தம்பியும் அவரது மனைவியுடன் உடன் வசிக்கிறார். இவர்களுக்கு சொந்தமாக அக்கிராமத்தில் 5 ஏக்கர் விவசாய நிலம் உள்ளது. இதில், கரும்பு பயிர் நடவு செய்து பராமரித்து வந்தனர்.

இதற்கிடையே, ரிஷிவந்தியம் ஒன்றிய திமுக கவுன்சிலரான யேசு ரட்சகர் என்பவர், இவர்களுடைய 5 ஏக்கர் நிலத்தை அபகரிக்க முயன்றதாக கூறப்படுகிறது.

மேலும், அதில் பயிரிடப்பட்டிருந்த கரும்பு பயிர்களை அடியாட்களுடன் சென்று மிரட்டி, சட்டவிரோதமாக தனது பெயரில் பதிவு செய்து, மூங்கில்துறைப்பட்டு கரும்பு ஆலைக்கு அனுப்பி, சுமார் ரூ.5 லட்சம் வரை மோசடி செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதைத் தட்டிக் கேட்ட ஆண்ட்ரூ வின்சென்ட்டின் மனைவி, 2 மகள்கள் மற்றும் ஆன்ட்ருவின் தம்பி மனைவி ஆகியோரை யேசு ரட்சகர் சில தினங்களுக்கு முன் தகாத வார்த்தைகளை பயன்படுத்தி, கொலை மிரட்டல் விடுத்துள்ளதாக தெரிகிறது. பாதிக்கப்பட்டவர்கள் மூங்கில் துறைபட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து யேசு ரட்சகர் மீது போலீஸார் வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் அவரை கைது செய்யவில்லை. தன் மீது புகார் அளித்த ஆத்திரத்தில், திமுக கவுன்சிலர் யேசு ரட்சகர், 2 தினங்களுக்கு முன் வீடு புகுந்து, ஆன்ட்ரூ வின்சென்ட் மனைவி, 2 மகள்கள் மற்றும் அவரது தம்பி மனைவி ஆகியோரை தாக்கியதாகவும் பாலியல் அத்துமீறலில் ஈடுபட முயன்றதாகவும் நிலத்தை தனக்கு எழுதி தருமாறு அந்தப் பெண்களை மிரட்டியதாகவும் கூறப்படுகிறது.

பாதிக்கப்பட்டவர்கள் கள்ளக்குறிச்சி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தற்போது தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இதுதொடர்பாக பாதிக்கப்பட்டபெண்கள் கள்ளக்குறிச்சி எஸ்.பி.அலுவலகத்திலும் புகார் அளித்துள்ளனர். இதையடுத்து திமுக ஒன்றிய கவுன்சிலர் யேசு ரட்சகர்மீது மூங்கில்துறைப்பட்டு போலீஸார் 5 பிரிவுகளின் கீழ் வழக்குபதிவு செய்துள்ளனர். எனினும், இதுவரை அவர் கைது செய்யப்படவில்லை.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in