Published : 02 Sep 2022 06:38 AM
Last Updated : 02 Sep 2022 06:38 AM

விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பு வரவேற்கத்தக்கது: இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் கருத்து

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, கோவையில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் நேற்று தொடங்கிய 'டிரான்ஸ்பார்மிங் இந்தியா' என்ற தலைப்பிலான கருத்தரங்கில் பேசிய இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன். படம்: ஜெ.மனோகரன்

கோவை: விண்வெளித்துறையில் தனியார் பங்களிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளதை வரவேற்பதாக இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் தெரிவித்துள்ளார்.

எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் 25-வது ஆண்டு கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 'டிரான்ஸ்பார்மிங் இந்தியா' என்ற தலைப்பிலான 3 நாட்கள் கருத்தரங்கு, கோவை மேட்டுப்பாளையத்தில் உள்ள எஸ்எஸ்விஎம் பள்ளியில் நேற்று தொடங்கியது. இதனை தொடங்கிவைத்து இஸ்ரோ முன்னாள் விஞ்ஞானி நம்பி நாராயணன் மாணவர்களிடையே பேசியது:

இந்தியாவின் விண்வெளித் திட்டங்கள் குறித்த ரகசியங்களை வெளிநாட்டுக்கு விற்றதாக, 1994-ல் என் மீது வழக்குப்பதிவு செய்தனர். அதில், 1998-ல் உச்ச நீதிமன்றத்தில் நான் குற்றமற்றவன் என நிரூபணமானது. உண்மையில், 4 ஆண்டுகளில் அந்த வழக்கு நிறைவுபெற்றுவிட்டது. ஆனால், அந்த வழக்கை நான் தொடர்ந்து நடத்தினேன். இறுதியாக கடந்த 2018-ல், 3 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் கொண்ட அமர்வு அந்த வழக்கில் தீர்ப்பு வழங்கியது.

அப்போது எனக்கு இருந்த கடனுக்கு, இழப்பீடு கிடைத்தால்போதும் என்ற மனநிலைக்கு வந்திருக்க வேண்டும். ஆனால், எனது இலக்கு அதுவாக இல்லை. நான் வழக்கில் சிக்க காரணமானவர்களுக்கு தண்டனை கிடைக்க வேண்டும் என்பதே எனது இலக்காக இருந்தது. அதனால்தான், 20 ஆண்டுகள் அந்த வழக்கை தொடர்ந்து நடத்தினேன். எனவே, உங்கள் இலக்கு தெளிவாக இருந்தால், நீங்கள் நினைப்பதை சாதிக்கலாம். எனக்கு இருந்த மன உறுதிதான் அந்த வழக்கை தொடர்ந்து நடத்த காரணமாக இருந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சிக்கு பிறகு, விண்வெளி செயல்பாடுகளில் தனியார் துறை பங்களிப்புக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது குறித்தும், அதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் நம்பி நாராயணனிடம் கேட்டதற்கு, “விண்வெளி செயல்பாடுகளில் தனியார் பங்களிப்பு சாத்தியமானதுதான். விண்வெளித் துறையில் தனியார் பங்களிப்பை வரவேற்கிறேன். இதன்மூலம், அனைத்து செலவுகளையும் அரசே ஏற்க வேண்டியிருக்காது.

பாதுகாப்பு பிரச்சினை வராது

பாதுகாப்பு விஷயத்திலும் பிரச்சினை ஏதும் இருக்காது. ஐரோப்பிய விண்வெளி நிறுவனம் என்பது பல நாடுகள் ஒன்றிணைந்ததுதான். அது வெற்றிகரமாகத்தான் இயங்கி வருகிறது. அங்கு பாதுகாப்பு விஷயத்தில் பிரச்சினை ஏதும் வரவில்லை.

அரசின் தனியார்மய அறிவிப்புக்குபோதிய வரவேற்பு இருக்கிறதா, வேலைக்கு சரியான நபர்கள் கிடைப்பார்களா என்பதை பார்க்க வேண்டும். இவை இல்லாவிட்டால், தனியார்மயமாக்குவதற்கு அர்த்தம் இல்லாமல் போய்விடும். அரசு சில அடிப்படையான பணிகளைச் செய்ய வேண்டும். அதை மட்டும் அரசு தன்வசம் வைத்திருக்க வேண்டும். அதுதவிர்த்து, மற்ற வேலைகளை தனியார்மயமாக்கலாம்.

உலகில் எந்தவிதமான போரும் சாத்தியம். அவ்வாறு ஏற்படும் போர், அழிவுக்குதான் வித்திடும். அணுசக்தியை வைத்திருக்கும் நாடுகள், அதை எச்சரிப்பதற்காக பயன்படுத்தலாம். ஆனால், அதை ஆயுதமாக பயன்படுத்தினால் மிகப்பெரிய அழிவு ஏற்படும். எந்தவொரு அறிவார்ந்த நபரும் அதைப் பயன்படுத்த மாட்டார்கள். விண்வெளித்துறையில் இந்தியா வலிமைமிக்க சக்தியாக மாற வேண்டுமெனில், இன்னும் அதிக எடை கொண்ட செயற்கைக்கோள்களை சுமந்து செல்லும் திறனை நாம் பெற வேண்டும்" என்றார்.

இந்த நிகழ்வில், எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களின் நிறுவனர், நிர்வாக அறங்காவலர் மணிமேகலை மோகன், அறங்காவலர் மோகன்தாஸ், இயக்குநர்கள் (கல்வி புலம்) ஷா மோகன்தாஸ், நிதின், ஹெல்த் பேசிக்ஸ் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி சுவாதி ரோகித் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். நிகழ்வின் ஒருபகுதியாக எஸ்எஸ்விஎம் கல்வி நிறுவனங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேலாக பணியாற்றிய ஆசிரியர்களுக்கு பாராட்டுச் சான்று வழங்கப்பட்டது.

FOLLOW US

தவறவிடாதீர்!

Sign up to receive our newsletter in your inbox every day!

WRITE A COMMENT
 
x