தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு

தீபாவளிக்கு 21,289 சிறப்பு பேருந்துகள்: அரசு போக்குவரத்து கழகம் அறிவிப்பு
Updated on
1 min read

தீபாவளிக்கு 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகையின்போது பொதுமக்கள் சென்னையில் இருந்து தங்கள் சொந்த ஊர்களுக்கு எளிதாக பயணம் செய்யும் வகையில் அனைத்துத் தரப்பினரையும் கலந்தாலோசித்து இந்த முடிவு எட்டப்பட்டுள்ளதாக போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.

சென்னையில் இருந்து 26-ம் தேதி 3 ஆயிரத்து 254 பேருந்துகள், 27-ம் தேதி 3 ஆயிரத்து 992 பேருந்துகள், 28-ம் தேதி 3 ஆயிரத்து 979 பேருந்துகள் என மொத்தம் 11 ஆயிரத்து 225 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

பிற பகுதிகளில் இருந்து, 26-ம் தேதி 2 ஆயிரத்து 507 பேருந்துகள், 27-ம் தேதி 3 ஆயிரத்து 488 பேருந்துகள், 28-ம் தேதி 4,069 பேருந்துகள் என மொத்தம் 10,064 பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

மொத்தம், 21,289 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படவுள்ளன.

சென்னை கோயம்பேடு பேருந்து நிலையம், தற்காலிகப் பேருந்து நிலையங்கள் அமைந்துள்ள மாநகர போக்குவரத்துக் கழக அண்ணா நகர் (மேற்கு), மாநில தேர்தல் ஆணைய அலுவலகம், தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையம், பூந்தமல்லி ஆகிய 5 இடங்களில் இருந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளுக்கு வருகிற 26, 27, 28 ஆகிய 3 நாட்கள் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன.

எந்த ஊருக்கு எந்த பேருந்து நிலையத்தில் இருந்து பேருந்து?

தற்காலிகப் பேருந்து நிலையங்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள நிலையில் எந்தெந்த ஊர்களுக்கான பேருந்துகள் எந்த இடத்தில் இருந்து புறப்படும் என்ற தகவலும் வெளியாகியுள்ளது.

அதன்படி, செங்குன்றம் வழியாக ஆந்திர மாநிலத்திற்கு செல்லும் அனைத்து தமிழக மற்றும் ஆந்திர மாநில பேருந்துகள் அண்ணாநகர் மேற்கில் உள்ள மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

கிழக்கு கடற்கரை சாலை வழியாக புதுச்சேரி, கடலூர், சிதம்பரம் செல்லும் பேருந்துகள், காஞ்சிபுரம் செல்லும் பேருந்துகள் கோயம்பேடு பேருந்து நிலையத்துக்கு எதிரே 100 அடி சாலையில் உள்ள மாநில தேர்தல் ஆணைய பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திண்டிவனம், விக்கிரவாண்டி வழியாக கும்பகோணம், தஞ்சாவூர் வழித்தடத்தில் செல்லும் பேருந்துகள் தாம்பரம் சானடோரியம் அறிஞர் அண்ணா பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

பூந்தமல்லி வழியாக வேலூர், தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பத்தூர், ஓசூர் செல்லும் பேருந்துகள் பூந்தமல்லி பேருந்து நிலையத்தில் இருந்து புறப்படும்.

திருச்சி, மதுரை, திருநெல்வேலி, செங்கோட்டை, தூத்துக்குடி, திருச்செந்தூர், நாகர்கோவில் கன்னியாகுமரி, திருவனந்தபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, ஆற்காடு, ஆரணி, சேலம், கோயம்புத்தூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம், வேளாங்கண்ணி மற்றும் பெங்களூர், எர்ணாகுளம் செல்லும் பேருந்துகள் கோயம்பேட்டில் இருந்து இயக்கப்படும்.

அதிகம் வாசித்தவை...

No stories found.

X
Hindu Tamil Thisai
www.hindutamil.in