

தேன்கனிக்கோட்டை பேருந்து நிலையம் பின்புறம் யாரப் தர்கா உள்ளது. தர்காவுக்கு அருகே உள்ள காலி நிலத்தில் 12 அடி உயரத்துக்கு சுற்றுச் சுவர் அமைக்கப்பட்டிருந்தது. கடந்த சில நாட்களாக பெய்த கனமழையினால் சுற்றுச்சுவர் சேதமடைந்திருந்த நிலையில், நேற்று முன்தினம் இடிந்து விழுந்தது.
இதில், சுவர் அருகே நின்ற தேன்கனிக்கோட்டை ஜெய் தெருவைச் சேர்ந்த பாலாஜி மகள் சஹானா (12) மற்றும் அதே பகுதியைச் சேர்ந்த அமுல்யா, அப்பகுதியில் விளையாட்டுப் பொருட்கள் விற்பனை கடை நடத்தி வந்த அசாம் மாநிலத்தைச் சேர்ந்த அமீதாபேகம் (35), மற்றும் இஷாத்அலி ஆகிய 4 பேரும் இடிபாடுகளில் சிக்கி படுகாயமடைந்தனர்.
தகவல் அறிந்து அங்கு வந்த தேன்கனிக்கோட்டை போலீஸார், காயமடைந்தவர்களை மீட்டு, தேன்கனிக்கோட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு சேர்த்தனர்.
இதில், அமீதா பேகம் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். மேல் சிகிச்சைக்காக கிருஷ்ணகிரி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்ட சஹானா வழியில் உயிரிழந்தார். இதுதொடர்பாக தேன்கனிக்கோட்டை போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.