

உள்ளாட்சித் தேர்தலில் அதிக இடங்களைக் கேட்டு திமுகவுடன் மீண்டும் பேச்சு நடத்துவோம் என தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார்.
சென்னை சத்தியமூர்த்தி பவனில் நேற்று திருநாவுக்கரசரை கேரள மாநில எதிர்க்கட்சித் தலைவர் ரமேஷ் சென்னிதாலா மரியாதை நிமித்தமாக சந்தித்துப் பேசினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் திருநாவுக்கரசர் கூறியதாவது:
உள்ளாட்சித் தேர்தல் குறித்து காங்கிரஸ் மாவட்டத் தலைவர்கள் கூட்டத்தில் விரிவாக விவாதித்தோம். உள்ளாட்சித் தேர்தலில் தனித்துப் போட்டியிடும் எண்ணம் இல்லை. காங்கிரஸ் - திமுக கூட்டணி தொடரும்.
உள்ளாட்சித் தேர்தலில் கன்னியாகுமரி உள்ளிட்ட சில மாவட்டங்களில் அதிக இடங் களும், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் குறைவான இடங்களும் ஒதுக்கப்பட்டன.
தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட தும் ஏற்கெனவே ஒதுக்கப்பட்ட இடங்களைவிட அதிக இடங்கள் ஒதுக்குமாறு திமுகவிடம் பேச்சு நடத்துவோம்.
வரவேற்கத்தக்கது
தலைமைச் செயலகத் தில் நிதியமைச்சர் ஓ.பன்னீர் செல்வத்தை எதிர்க்கட்சித் தலைவர் மு.க.ஸ்டாலின் சந்தித்து மனு கொடுத்துள்ளார். இது போன்ற அணுகுமுறைகள் வரவேற்கத்தக்கது. தமிழக அமைச் சரவைக் கூட்டத்தை கூட்டி காவிரி பிரச்சினை உள்ளிட்ட பிரச்சினைகளில் முக்கிய முடிவுகளை ஓ.பன்னீர்செல்வம் எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.