Published : 02 Sep 2022 06:07 AM
Last Updated : 02 Sep 2022 06:07 AM
சென்னை: மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் உள்ளிட்டபோக்குவரத்து சேவைகளுக்கும் பயன்படுத்தக்கூடிய தேசிய பொது இயக்க அட்டை, சென்னை மெட்ரோ ரயில்களில் 2 மாதங்களில் அமல்படுத்தப்பட உள்ளது.
தேசிய பொது இயக்க அட்டை சேவை (National Common Mobility Card - என்சிஎம்சி) மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகத்தால் உருவாக்கப்பட்டு, கடந்த 2019-ல் அறிமுகம் செய்யப்பட்டது. இது மெட்ரோ ரயில், மாநகர பேருந்து, புறநகர் ரயில் போக்குவரத்து ஆகியவற்றில் தடையற்ற பயணத்தை அனுமதிக்கிறது. அதாவது, இந்த அட்டை மூலமாக, மெட்ரோ ரயிலிலும், பேருந்துகளிலும் பயணிக்கலாம். சுங்கச்சாவடி, வாகன நிறுத்துமிட கட்டணம், வங்கி பரிவர்த்தனைகள், சில்லறை வர்த்தகத்துக்கு இந்த பொது பயண அட்டையை பயன்படுத்த முடியும்.
இந்த அட்டையை நாடு முழுவதும் உள்ள மெட்ரோ ரயில்களில் பயன்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மத்திய வீட்டு வசதி, நகர்ப்புற விவகார அமைச்சகம் அறிவுறுத்தியது. இதன்பேரில், சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் விரைவில் இந்த அட்டையை நடைமுறைக்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது.
எளிதானது, பாதுகாப்பானது
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரிகள் கூறியதாவது: நாடு முழுவதும் மெட்ரோ ரயில்களில் தேசிய பொது இயக்க அட்டையை பயன்படுத்தி, பயணிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்படுகிறது. இதை பயன்படுத்துவது எளிதானது, பாதுகாப்பானது. ரொக்கமில்லா பரிவர்த்தனைக்கு ஏற்றது.
இதை சென்னை மெட்ரோ ரயில் நிலையங்களில் இன்னும் 2 மாதங்களில் அறிமுகம் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. தற்போது உள்ள மெட்ரோ ரயில் ஸ்மார்ட் கார்டு போலவே இது செயல்படும். அதேநேரம், மெட்ரோ ரயில் பயணம் மற்றும் மெட்ரோ நிலையங்களில் வாகனங்களை நிறுத்துவதற்கு மட்டுமே பயன்படும் ஸ்மார்ட் அட்டை போல அல்லாமல், மாநகரப் பேருந்து, புறநகர் ரயில் போன்ற மற்ற போக்குவரத்து சேவைகளுக்கும் இதை பயன்படுத்த முடியும்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT