Published : 02 Sep 2022 06:50 AM
Last Updated : 02 Sep 2022 06:50 AM
சென்னை: ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்கள் சிலவற்றுக்கு மத்திய அரசு தடை விதித்துள்ளது. இந்தத் தடையை அமல்படுத்தவும், கண்காணிக்கவும் இரு செயலிகள் உருவாக்கப்பட்டுள்ளன. அவற்றை முறையாகப் பயன்படுத்தி, தடைசெய்யப்பட்ட பிளாஸ்டிக் பயன்பாட்டை ஒழிக்குமாறு தமிழ்நாடு மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் அறிவுறுத்தியுள்ளது.
இந்தியாவில் தினமும் 15 ஆயிரம் டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. தமிழகத்தில் மட்டும் தினமும் 1,178 டன் பிளாஸ்டிக் கழிவுகள் உற்பத்தியாகின்றன. இவற்றில் 40 சதவீதம் சேகரிக்கப்படுவதில்லை. குறிப்பாக ஒருமுறை மட்டும் பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் பொருட்களான பிளாஸ்டிக் தாள், குவளைகள், பைகள், புட்டிகள் போன்றவையே அதிகமாக உள்ளன. இந்த பிளாஸ்டிக் பொருட்களால் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுகிறது.
இதைக் கருத்தில் கொண்டு, ஒருமுறை பயன்படுத்தப்பட்டு தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் தாள், உணவு அருந்தும் மேஜையின் மீது விரிக்கப்படும் பிளாஸ்டிக் தாள், தெர்மாகோல் தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித தட்டுகள், பிளாஸ்டிக் பூசப்பட்ட காகித குவளைகள், பிளாஸ்டிக் தேநீர் குவளைகள், பிளாஸ்டிக் பைகள் (எந்த அளவிலும், எந்த தடிமனாக இருப்பினும்) உள்ளிட்ட 14 வகையான பிளாஸ்டிக் பொருட்களுக்கு தமிழக அரசால் தடை விதிக்கப்பட்டு, கடந்த 2019-ம் ஆண்டு ஜன.1 முதல் அமலில் உள்ளது.
இதற்கிடையே மத்திய அரசு, கடந்த ஜூலை 1-ம் தேதி முதல், ஒருமுறை பயன்படுத்தி தூக்கி எறியப்படும் பிளாஸ்டிக் குச்சிகள் கொண்ட காது மொட்டுகள், பலூன்களுக்கான பிளாஸ்டிக் குச்சிகள், பிளாஸ்டிக் கொடி, மிட்டாய் குச்சிகள், ஐஸ்கிரீம் குச்சிகள், அலங்காரத்துக்காக பயன்படுத்தப்படும் பாலீஸ்டைரின் (தெர்மாகோல்), பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், குவளைகள், மெல்லிய பிளாஸ்டிக் கொண்டு போர்த்தப்படும் அல்லது பேக்கிங் செய்யப்படும் இனிப்பு பெட்டிகள், அழைப்பிதழ் அட்டைகள் மற்றும் சிகரெட் பாக்கெட்கள், 100 மைக்ரானுக்கு குறைவான பிளாஸ்டிக் அல்லது பிவிசி பேனர்கள் ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளன. இதை உள்ளாட்சி அமைப்புகள் செயல்படுத்தவும், கண்காணிக்கவும் மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் இரு செயலிகளை அறிமுகப்படுத்தியுள்ளது.
இதுதொடர்பாக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கூறியது: மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில், மத்திய அரசின் பிளாஸ்டிக் மீதான தடையை செயல்படுத்த எஸ்யுபி (SUP Public Grievance App) என்ற புகார் செயலி உருவாக்கப்பட்டுள்ளது. இந்த செயலியைக் கொண்டு மத்திய அரசு தடை விதித்துள்ள பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாடு குறித்து பொதுமக்கள் படம் எடுத்து, பதிவேற்றி புகார் தெரிவிக்கலாம்.
இது ஜிபிஎஸ் அமைவிடம் அடிப்படையில் தொடர்புடைய உள்ளாட்சி அமைப்பு மற்றும் மத்திய, மாநில மாடுக்கட்டுப்பாட்டு வாரியங்களுக்கு புகாரை அனுப்பும். அதன் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து செயலியிலேயே உள்ளாட்சி அதிகாரிகள் பதிவிட வேண்டும். நடவடிக்கை எடுக்காமல் இருந்தால், மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியஅதிகாரிகள், உள்ளாட்சி அமைப்புகளுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கி, உள்ளாட்சி அமைப்புகள் நடவடிக்கை எடுக்க வைப்பார்கள்.
மேலும், மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் சார்பில் எஸ்யுபி (SUP Field Inspection App) என்றகணகாணிப்பு செயலியும் வெளியிடப்பட்டுள்ளது. இதில் உள்ளாட்சி அமைப்பு அதிகாரிகள் களத்துக்கு சென்று எடுத்த நடவடிக்கைகள் குறித்து பதிவிட வேண்டும். களத்துக்கே செல்லாமல் இருந்தால் மத்திய, மாநில மாசுக்கட்டுப்பாட்டு வாரியங்கள் உரிய அறிவுறுத்தல்களை வழங்கும்.
Sign up to receive our newsletter in your inbox every day!
WRITE A COMMENT