

உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க அவசர சட்டம் மூலம் தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர்.
தமிழகத்தில் தற்போது சென்னை, மதுரை, கோவை உட்பட 12 மாநகராட்சிகள் உள்ளன. இவை தவிர, 125 நகராட்சிகள், 529 பேரூராட்சிகள், 12 ஆயிரத்து 524 ஊராட்சிகள், 388 ஊராட்சி ஒன்றியங்கள், 31 மாவட்ட ஊராட்சிகள் உள்ளன.
இவற்றில், மாநகராட்சி மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர்கள், மாநக ராட்சி மாமன்ற உறுப்பினர்கள், நகராட்சி, பேரூராட்சி வார்டு உறுப்பினர்கள் என ஒரு லட்சத்து 30 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பதவிகளுக்கான பதவிக் காலம் வரும் அக்டோபர் 24-ம் தேதியுடன் முடிகிறது.
இப்பதவிகளுக்கு புதியவர் களை தேர்வு செய்ய, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் கடந்த மாதம் 25-ம் தேதி உள்ளாட்சித் தேர்தலை அறிவித்தது. அக்டோபர் 17 மற்றும் 19-ம் தேதிகளில் தேர்தல் நடத்தப்படும் என அறிவிப்பில் கூறப்பட்டது. நகராட்சிகள் சட்டத் தில் சமீபத்தில் கொண்டுவரப்பட்ட திருத்தங்களின் அடிப்படையில் மேயர், துணை மேயர், நகராட்சி, பேரூராட்சி தலைவர், துணைத் தலைவர் உள்ளிட்ட 14 ஆயிரத்து 690 பதவிகளுக்கான மறைமுக தேர்தல் நவம்பர் 2-ம் தேதி நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையடுத்து செப்டம்பர் 26-ம் தேதி முதல் வேட்பு மனுத்தாக்கல் தொடங்கி, அக் டோபர் 3-ம் தேதி முடிந்தது. அக்டோபர் 4-ம் தேதி மனுக்கள் பரிசீலனை தொடங்கியது. அன்று, உள்ளாட்சி அமைப்புகளுக்கான இட ஒதுக்கீட்டு முறை சரியாக நிர்ணயிக்கப்படாமல், அவசரமாக தேர்தல் அறிவிக்கப்பட்டிருப்பதாக, திமுக சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு விசாரணைக்கு வந்தது.
விசாரணையில், உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்தும், புதிய அறிவிக்கையை வெளியிட்டு டிசம்பர் 31-ம் தேதிக்குள் உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தலை நடத்தி முடிக்குமாறும் உயர் நீதிமன்றம் உத்தரவிட்டது. இதை யடுத்து, மாநில தேர்தல் ஆணையம் மேல் முறையீடு செய்தபோதும், தேர்தல் ரத்துக்கு தடை விதிக்கப்படவில்லை.
இதையடுத்து, தேர்தல் நடவடிக் கைகளை மாநில தேர்தல் ஆணையம் மறு உத்தரவு வரும் வரை நிறுத்தி வைத்தது. நடத்தை விதிகளும் விலக்கிக் கொள்ளப்பட்டன.
வரும் அக்டோபர் 24-ம் தேதியு டன் மேயர் உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் பதவி விலக வேண்டும். தேர்தல் தள்ளிப்போவதால், புதியவர்கள் பதவியேற்க முடியாத நிலை தற்போது ஏற்பட்டுள்ளது.
இந்தச் சூழலில் உள்ளாட்சி நிர்வாகத்தை கவனிக்க, தனி அதிகாரிகளை நியமிக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. கடந்த 1996-க்கு முன், உள்ளாட்சி நிர்வாகத்துக்கு தனி அதிகாரிகளே நியமிக்கப்பட்டிருந்தனர். அதே நடைமுறையை பின்பற்றி, தனி அதிகாரிகள் நியமிக்கப்பட உள் ளனர். இதற்கு அவசர சட்டம் பிறப்பிக்கப்பட வேண்டும்.
தயாராகும் கோப்புகள்
இது தொடர்பாக நகராட்சி நிர்வாகத்துறை அதிகாரி ஒருவர் ‘தி இந்து’விடம் கூறியதாவது:
தற்போது, முதல்வர் ஜெய லலிதா மருத்துவமனையில் இருப் பதால், அவரது துறைகள் நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வத் திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. அவர் தலைமையில் இனி அமைச் சரவை கூடி, உள்ளாட்சிகளுக்கு தனி அதிகாரிகளை நியமிப்பதற் கான அவசரச் சட்டம் குறித்து விவாதிக்கும். அதன்பின், அவசரச் சட்டம் ஆளுநருக்கு பரிந்துரைக் கப்பட்டு, அவர் சட்டத்தை பிறப் பித்ததும் உள்ளாட்சிகளுக்கான தனி அதிகாரிகள் நியமிக்கப் படுவர். தற்போது இதற்கான கோப்புகள் துறைகளில் தயாராகி வருகின்றன.
எப்படி செயல்படும்
அவசரச் சட்டம் மூலம், மாநக ராட்சிகளில் தற்போது உள்ள ஆணையர்கள், நகராட்சி ஆணை யர்கள், வட்டார வளர்ச்சி அலுவ லர்கள் தனி அதிகாரிகளாக நியமிக் கப்படுவர். அவசர சட்டத்தின் மூலம் 6 மாதங்களுக்கு இவர்கள் நியமிக்கப்பட வாய்ப்புள்ளது. நீதிமன்ற உத்தரவுப்படி டிசம்ப ருக்குள் தேர்தல் நடத்தி முடிக்கப் பட்டு, புதியவர்கள் நியமிக்கப்படும் வரை இவர்கள் பதவியில் இருப்பர். இவர்கள் மூலமே உள்ளாட்சி அமைப்புகளுக்கான நிதிகள் பெறப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார்.